ஹேப்பி “சிஸ்டர்ஸ்” டே!.. இன்று உலக செவிலியர்கள் தினம்!

மே மாதம் 12-ம் தேதி நாடு முழுவதும் செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. தன்னலமற்ற சேவையை கவுரவிக்கும் விதமாக செவிலியர்களுக்கு இந்த செய்தி தொகுப்பை அர்ப்பணிக்கிறோம்.

செவிலியர்களின் முன்னோடியாக போற்றப்படும் இத்தாலியை சேர்ந்த ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேள் அம்மையாரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக செவிலியர்கள் தினம் 1974ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக செவிலியர் தினம் ஒவ்வொரு கருப்பொருளை மையமாக கொண்டு கொண்டாடப்படுகிறது. அப்படி இந்தாண்டு “நமது செவிலியர்கள், நமது எதிர்காலம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து உலக செவிலியர் தினத்தை கொண்டாடுகிறது சர்வதேசிய செவிலியர்கள் அமைப்பு.

நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களை பெற்றோர்கள், உடன்பிறந்தவர்களே தூர நின்று தான் பார்த்துக்கொள்வார்கள். நண்பர்கள், உறவினர்கள் நலம் விசாரிப்பதோடு சரி இதில் செலிவியர்களின் பங்கு அளப்பரியது. வெறும் வார்த்தைகளால் அவர்களின் சேவைகளை போற்றவது கடினம் தான். கொரோனா காலத்தில் கூட தங்கள் உயிரை கொடுத்து பலரின் உயிரை காப்பாற்றிய தெய்வங்கள்.
தன்னலம் கருதாமல் தங்கள் குடும்பம், பிள்ளைகளை இரண்டாம் பட்சத்தில் வைத்து நோய்வாய் பட்டவர்களுக்காக செவிலியர்கள் ஆற்றும் சேவை எவற்றிற்கும் நிகரில்லாதது.

ஒவ்வொரு நாளும் விதவிதமான அனுபவங்களை வாங்கி செல்லும் செவிலியர்கள் சகிப்புதன்மை மிக்கவர்களாக விளங்குகின்றனர். சொல்லப்போனால் மருத்துவரின் ஆறுதலை விட ஒரு நோயாளிக்கு செவிலியர்கள் தரும் நம்பிக்கை வார்த்தைகளே அந்நோயிலிருந்து மீண்டு வர பேருதவியாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு சரியான மரியாதை கொடுப்பதில் மக்களிடம் சுனக்கமும் விழிப்புணர்வின்மையும் மிகுந்திருப்பதை காணமுடிகிறது. ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்களும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அது மிகவும் தவறு. அந்த வரிசையில் இன்னும் சிலர் அலட்சியமாக அவர்களை அணுகுவது, அதிகார தொணியில் வேலை வாங்குவது அவர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்பதை நினைவில் கொண்டு அணுகவேண்டும். அவர்களுக்கான மரியாதையை கொடுப்பதே நாம் செய்யும் கைமாறாக இருக்க முடியும். வெறும் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் தொழில் அல்ல செவிலியர்களின் பணி. ஆபத்து என்று தெரிந்தே நோய்களுக்கு மத்தியில் சேவை மனப்பான்மையோடு செய்யப்படும் ஒரு சமூக சேவை அது.

வாழ்வின் கடினமான சூழலில் இருக்கும் நோயாளிகள் மீது தேவையான அக்கறை செலுத்தி நிபந்தனையற்ற சேவையை வழங்கிய செவிலியர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுகளையும் செவிலியர் தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகிறது நியூஸ் ஜெ.

– ராஜா சத்யநாராயணன்,செய்தியாளர்

Exit mobile version