கரு உற்றவள் அல்ல தாய்! கருணை உற்றவள் தான் தாய்! அனுதினமும் கொண்டாடுவோம் அன்னையரை!

இன்று இந்தியாவில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது… இந்த மகிழ்ச்சியான நாளில் அன்னையர் தினத்தை தவிர்த்து மற்ற நாட்களில் அவர்களின் நிலை என்னவாக இருக்கின்றது என விரிவாக பார்ப்போம்..

அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், ஒவ்வொரு நாடுகளிலும் வெவ்வேறு நாளில் இந்த இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் மே மாதம் 14-ஆம் நாள் அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது…..

“இன்றுவரை அம்மா கதவுளின் பின்னிருந்துதான் அப்பாவோடு பேசுகிறாள்… கடைசிவரை அப்பாவும் மறந்தே போனார் மனசுக்குள் தூரெடுக்க” – மறைந்த கவிஞர் நா. முத்துகுமாரின் இந்த வரிகள் காலம் காலமாக தொடரும் வீட்டிலிருக்கும் அம்மாவின் நிலையை எளிதாக கூறிவிடும்.

மனித இனம் தோன்றி வளர்ச்சிடையந்த கால கட்டத்தில் தாய் வழிச் சமூகமே இருந்ததாக ஆதாரங்கள் உள்ளது… தாய் வழிச்சமூகத்தில் பெண்கள் தலைமை பொறுப்பில் இருந்தார்கள். அவர்களிடம் அதிகாரம் இருந்தது. குழுக்களை வழிநடத்தும் பொறுப்பும், முடிவுகள் எடுக்கும் பொறுப்பும் அவர்களிடமே இருந்தது… ஆனால் தந்தை வழிச்சமூகம் தொடங்கியதும் பெண்கள் வீட்டிலேயே முடக்கப்பட்டனர். அன்று தொடங்கிய முடக்குதல் இன்று வரை தொடர்கதையாகி உள்ளது…..

அம்மாக்களின் உலகம் என்பது அடுப்படியாக மட்டுமே அமைந்துள்ளது…. துணிகளை துவைப்பதும், அடுப்படியில் சமைப்பதும் மட்டுமே அம்மாக்களின் பிரதான கடமை என நினைக்கின்றோம் நாம். இந்தியச் சமூகத்தில் 90 சதவீத அம்மாக்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்…. வேலைக்கு சென்றுவந்த அப்பா ஓய்வெடுக்க… வேலைக்கு சென்று வந்த அம்மாவோ, வீட்டில் மறுபடியும் தன் வேலையை தொடர்கிறார்….

“வீட்டு வேலை செய்வதே அம்மாக்களின் கடமை என காலம் காலமாக சொல்லி அவர்களை நம்ப வைத்துவிட்டோம்…அதை புனிதப்படுத்த ஆயிரம் வேதகால கதைகளும் உள்ளன. “தாய் வீட்டில் இருந்தே அடுப்படி வேலைகளை பின் தொடர்கிறீர்களே, இது உங்களுக்கு சலிப்பை தரவில்லையா என யாருமே நம் அம்மாவிடம் கேட்பதே இல்லை”…மகனுக்காகவும், மகளுக்காகவும், வாழ்கிறேன், அவர்கள் மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம் எனக்கூறும் அம்மாவிடம், உங்களுக்காக சில நிமிடம் வாழ்ந்தீர்களா என கேள்வி எழுப்பி பாருங்களேன் அவர்களிடம் எந்த பதிலும் இருக்காது….

பெண்களிடம் கரண்டியை பிடுங்கிக் கொண்டு, புத்தகத்தை கொடுங்கள் என்று பெரியார் கூறியிருந்தார். அவர் கூறி 30 ஆண்டுகளுக்கு பின் வந்த நவீன அம்மாக்கள் ஒரு கையில் புத்தகமும், மற்றொரு கையில் கரண்டியும் வைத்துள்ளனர்…

அன்னையர் தினத்தை புனிதப்படுத்துவதை நிறுத்திவிட்டு, எல்லா தினங்களிலும் அவர்களை கொண்டாடுவோம்…நம்மை நேசித்து வளர்த்த அம்மாக்களை அடுப்படிச் சிறையில் இருந்து விடுவித்து, அவர்களின் மகிழ்ச்சி என்ன என்பதை கேட்டறிந்து நிறைவேற்றுவோம்.

Exit mobile version