உலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் காரை, பொறியியல் வல்லுநர்கள் காட்சிப்படுத்தி உள்ளனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள் “ப்ளட்ஹவுன்ட்” என்று பெயரிடப்பட்ட காரைத் தற்போது தயாரித்துள்ளனர். இந்தக் கார் மணிக்கு 1,227 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் திறன் கொண்டது. இதற்காகவே இக்காருக்கு டைபூன் என்ற போர் விமானத்தின் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 44 அடி நீளமும் 9 அடி உயரமும் கொண்ட கார் 7,500 கிலோ எடை கொண்டதாகும்.
கார் புறப்படும் போது கிட்டத்தட்ட 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை வெளிவிடும். தரையில் இயக்கப்படும் வாகனங்களில் அதிவேகமானது என்ற பெயரை “ப்ளட்ஹவுன்ட்” பெற்று விடும் என அதனைத் தயாரித்தவர்கள் தெரிவித்துள்ளனர். தயாரிக்கும் பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது இந்தக் கார் ஆப்பிரிக்காவின் ஹக்ஸ்கீன்பன் பாலைவனத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தக் கார் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.