உலகப் பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தில் இன்று தொடக்கம்

50-வது உலகப் பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் இன்று தொடங்குகிறது. 4 நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், சர்வதேச சவால்கள் பலவற்றுக்குத் தீர்வு காண்பது குறித்த விவாதம் நடைபெற உள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில், ஒவ்வொரு ஆண்டும் உலகப் பொருளாதார மாநாடு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான உலகப் பொருளாதார மாநாடு இன்று தொடங்குகிறது. வரும் 24 ஆம் தேதி வரை, நான்கு நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், சமநிலையற்ற வருமானம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், ஜெர்மன் அதிபர் மெர்கல், ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி, பாக் பிரதமர் இம்ரான்கான் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே இந்த மாநாட்டில் கலந்து கொண்டு மனநிலை ஆரோக்கியம் குறித்துப் பேசுகிறார். ஈஷா யோக அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவின் யோகா நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது. மேலும், கவுதம் அதானி, சஞ்சீவ் பஜாஜ் உள்பட இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தலைமைச் செயல் அதிகாரிகள் 100 பேரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். 

Exit mobile version