பெண்ணுரிமை – இந்தியாவிற்கே முன்னோடி தமிழகம்!

ஆண்களைப்போலவே, பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சம உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கிறது இந்தியா.  ஆனால், பல ஆண்டுகளாகவே தமிழகம் பெண்களின் உரிமைகளை உறுதி செய்வதில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்குகிறது.

அடிமைப்பட்டிருந்த பெண்களுக்கு அனைத்திலும் சம உரிமை வாங்கித்தர புரட்சி விதை போட்டு, இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழகம் இன்றும் திகழ்கிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் தந்தை பெரியாரும் அவர் வழி வந்த பேரறிஞர் அண்ணாவின் பெயர் சொல்லும் நம் தமிழக அரசும்தான்.

1929ம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டின் தீர்மானங்கள் இன்றுவரை பல வரலாறுகளை படைத்துக்கொண்டிருக்கிறது. யாருமே நினைத்துக்கூட பார்க்காத விதவை மறுமணம், சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை என்று பெண்களின் உரிமையை உறுதிப்படுத்தும் புரட்சிகர தீர்மானத்தை அந்த செங்கல்பட்டு மாநாட்டில் நிறைவேற்றினார் தந்தை பெரியார்.

சுமார் 25 ஆண்டுகளுக்குப்பிறகுதான் 1956ம் ஆண்டு இந்தியாவில் இந்து வாரிசு உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின்படி குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த சட்டத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்படி 1989-க்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து பெண் தங்கள் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கேட்க முடியாது. அதற்கு பின்னர் திருமணம் செய்துகொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை கோர உரிமை உண்டு. எனினும் சொத்து பாகப்பிரிவினை 25.3.1989-க்கு முன்பு செய்யப்பட்டிருந்தால் அந்த சொத்தில் உரிமை கோர முடியாது என்று திருத்தப்பட்டது. கைக்கு எட்டிய பெண்களுக்கான உரிமை வாய்க்கு எட்டாததைப்போலவே இருந்துவந்தது.

ஆனால் தமிழக அரசோ, தந்தை பெரியாரின் பெண்விடுதலை வேட்கையை நிறைவேற்றும் பொருட்டு பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உள்ளது என்று 1989ம் ஆண்டு சட்டம் இயற்றியது… பெரியாரின் பெண் உரிமை முழக்கத்தை 91 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் இந்தியா முழுக்க இருக்கும் பெண்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

இதுமட்டுமா? நாட்டை வழிநடுத்துவதிலும் பெண்களுக்கு உரிமை வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, 2016ம் ஆண்டு, உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் சட்டத்தை கொண்டு வந்தார். பெண்களின் சொத்து உரிமை மட்டுமல்ல, பெண்களுக்கு எல்லாவிதமான உரிமைகளையும் உறுதி செய்வதில் தமிழக அரசு நூறாண்டுகளாகவே முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

 

Exit mobile version