மதுரையில் கடனை திருப்பிக் கேட்ட பெண் படுகொலை

கடனை திருப்பிக் கேட்ட ஆத்திரத்தில், பெண்னை கடத்திச் சென்று, கழுத்தறுத்து படுகொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டியை சேர்ந்தவர் உமாதேவி வயது 45. கணவனை இழந்து மகன், மகளோடு உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரில் உமாதேவி வசித்து வந்தார். காய்கறி வியாபாரம் செய்து, குழந்தைகளை காப்பாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தெரிந்த நபரிடம் பணம் வாங்கி வருவதாக குழந்தைகளிடம் கூறி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உமாதேவியை பிள்ளைகள் தேடி வந்தனர். நேற்று காலை உத்தப்பநாயக்கனூர் அரசு பாலிடெக்னிக் எதிரே உள்ள மொட்டைமலையில், உமாதேவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.இது குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில் அவரை கழுத்தறுத்து கொலை செய்தவர், உசிலம்பட்டியில் இறைச்சி கடை வைத்து நடத்தி வரும் மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த மகாலிங்கம் எனத்தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், மகாலிங்கத்திற்கு உமாதேவி கடன் கொடுத்துள்ளார். வாங்கிய பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததால், வீட்டிற்கே சென்று பணத்தை கேட்டதால்,ஆத்திரமடைந்துள்ளார். பணம் தருவதாகக் கூறி ஒரு இடத்திற்கு வரச் செய்த மகாலிங்கம், ‘தனக்குத் தெரிந்தவர் பணம் தருவதாகக் கூறி இருக்கிறார். அதை வாங்கித் தருகிறேன்’ எனக்கூறி டூவீலரில் உமாதேவியை ஏற்றிக்கொண்டு மொட்டைமலை பகுதிக்கு கடத்தி சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே டூவீலரில் மறைத்து வைத்திருந்த மாட்டிறைச்சி வெட்டும் கத்தியால், உமாதேவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து, உடலை அங்கேயே போட்டு விட்டு வந்து விட்டார். டூவீலர், கத்தியை போலீசார் மீட்டனர்.

Exit mobile version