பட்டாசு தொழில் குறித்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் பட்டாசு தொழில் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தும் வகையில் கோழிகள் அபிவிருத்தித் திட்டமானது துவங்கப்பட்டுள்ளது. இதன்படி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நபர் ஒருவருக்கு 40 கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டத்தை 200 பயனாளிகளுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அறிமுகப்படுத்திய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி என அவர் புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், உச்ச நீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ள பட்டாசு தொழிலுக்கான வழக்கில் நல்ல தீர்ப்பு வருமென நம்பிக்கை தெரிவித்தார். விருதுநகரின் முக்கிய தொழிலான பட்டாசு தொழிலை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version