எந்தெந்த பிளாஸ்டிக் பைகளுக்கு தடை – சிறப்பு தொகுப்பு

பிளாஸ்டிக் தடை பற்றி நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தடையை விலக்க வேண்டும் என பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். இந்த சூழ்நிலையில், எத்தகைய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, எவற்றை மறுசுழற்சி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய செய்தி தொகுப்பை இப்போது பார்ப்போம்.

பிளாஸ்டிக் பொருட்களை மூன்று வகையாக தரம் பிரிக்கலாம். 40 மைக்ரான் அளவுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மக்கும் தன்மை கொண்டவை. அவற்றை தயாரிக்க அனுமதி உண்டு. 40 மைக்ரானுக்கு சற்று மேம்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யலாம். எனவே அவற்றுக்கும் அனுமதி உண்டு. மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் தான் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பாளர்களும், பொதுமக்களும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஜவுளிக்கடை உள்ளிட்ட கடைகளுக்காக தயாரிக்கப்படும் நெகிழிப்பைகள் லோசிட்டி பாலித்தின் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது இது மக்கும் தன்மை கொண்டவை ஆகும். 40 மைக்ரான் அளவுக்குள் இருப்பதால் இவை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை.

ரொட்டி, ஊறுகாய் உள்ளிட்டவைகளுக்கான நெகிழிப்பைகள் பாலியேஸ்டர் பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. இது வெள்ளை நிற பிளாஸ்டிக் தாளில் அச்சிடும் தொழில்நுட்பம் ஆகும். மக்கும் தன்மை கொண்ட இவ்வகை பைகள் சிவகாசியிலிருந்து இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு விற்பனைக்காகவும் அனுப்பப்படுகிறது.

40 மைக்ரான் தடிமனுக்கு மேற்பட்ட பிளாஸ்டிக் பைகள் மறுசுழற்சி செய்யப்படக் கூடியவை ஆகும். எனவே இவை ‘சூழல் நண்பன்’ என அழைக்கப்படுகிறது. இவை ரப்பர் போல் நீளும், இளகும், எளிதில் தீப்பற்றாது. ஆனால் இவற்றை எரிக்க மட்டும் செய்யக்கூடாது. இப்படி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கும் பாதிப்பு இல்லாத வகையில் உற்பத்தி செய்ய தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

எனவே பாதுகாப்பான சுற்றுச்சூழலை உருவாக்க அனுமதிக்கப்பட்ட அளவில் மட்டுமே பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோம்.

Exit mobile version