நடிகர் ரோபோ ஷங்கர் தன்னுடைய வீட்டில் கிளிகள் வளர்த்ததால் வனத்துறை அவருக்கு 2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தனியார் வலையொளி(you tube) ஒன்றிற்காக ரோபோ ஷங்கரின் வீட்டிற்கு ஹோம் டூர் சென்ற புகழ் மற்றும் பாலா இருவரும் அவரது வீட்டை முழுமையாக காணொளி எடுத்தனர். அப்போது ரோபோ ஷங்கர் தனக்கு அன்பளிப்பாய் வந்த பச்சைக்கிளிகளை காண்பித்திருக்கிறார். மேலும் அவற்றை அவர் கூண்டிற்குள் வைத்து வளர்த்திருக்கிறார். இந்த காணொளியைக் கண்ட வனத்துறையினர் அவர் வளர்க்கும் பெரிய பச்சைக்கிளிகள் இந்திய வன உயிரி சட்டம் 1948ன் படி அழிவுறும் இந்திய உயிரினங்களின் வரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது என்று தெரிவித்து அவற்றை வளர்ப்பது சட்டப்படி குற்றம் என்று தெரிவித்தனர். மேலும் இந்த வகையான கிளிகளை வளர்ப்பதும், இனப்பெருக்கம் செய்வதும் சட்டப்படி குற்றம் என்கிற வகையிலும் வனத்துறையிடம் ஒப்புதல் பெறாமல் இருந்ததாலும் ரோபோ ஷங்கருக்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த செய்தி ஒருபுறம் இருக்க, நமது வீடுகளில் எந்தெந்த பறவைகளை வளர்ப்புப் பிராணியாக வளர்க்கலாம், வளர்க்கக்கூடாது என்று தற்போது பார்ப்போம்.
இந்திய வனவிலங்கு மற்றும் வன உயிரி பாதுகாப்புச் சட்டப்படி இந்திய பறவையினங்களை வீட்டிற்குள் அடைத்து வைத்து வளர்க்கக்கூடாது. ஆனால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பறவையினங்களை வளர்க்கலாம். குறிப்பாக budgerigar எனப்படும் காதற்கிளி, cackatoo எனப்படும் கொண்டைக்கிளி போன்ற வெளிநாட்டு கிளிவகைகளை வளர்க்கலாம். அவற்றையுமே இந்திய அரசிடம் ஒப்புதல் பெற்றப் பிறகே வளர்க்கலாம். ஆனால் இந்தியக் கிளிவகைகளை வளர்ப்பது தவறு என்று சொல்லப்படுகிறது. மேலும் தேசிய பறவைகள் என்ற வகைமைக்குள் வரும் மயில் போன்ற பறவைகளை வீட்டில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். இந்திய இன சிட்டுக்குருவிகளைக் கூட வளர்க்கக்கூடாது என்கிறார்கள். உலக அளவில் கூட wild life எனப்படும் வனவியல் சார்ந்து இருக்கக்கூடிய உயிரினங்களை மக்கள் வீட்டில் அடைத்து வைத்து வளர்ப்பது தவறு. காரணம் அதற்கான வாழ்வாதாரமும் சூழலும் காட்டிற்குள் தான் இருக்கிறது என்பது வனவியலாளர்களின் கூற்று. அப்படியென்றால் எந்தப் பறவைகளையும் இந்தியாவில் வளர்க்கமுடியாதா என்று கேட்டால், இந்தியாவைப் பொறுத்தவரை புறாக்களை வீட்டில் வளர்ப்புப் பிராணியாக வளர்க்கலாம் என்று சட்டம் சொல்கிறது.