இங்கிலாந்தின் பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே ராஜினாமா செய்துள்ளதற்கு காரணமாக அமைந்துள்ளது பிரெக்ஸிட். பிரெக்ஸிட் என்றால் என்ன? என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்..
Britain Exit என்பதன் சுருக்கமே Brexit. பிரிட்டன் வெளியேறுதல் என்பதே இதன் அர்த்தம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான விஷயம் என்பதால் இந்தச் சொல் இதில் பயன்படுத்தப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியம் என்பது ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 28 நாடுகள் சேர்ந்த ஒரு அமைப்பு ஆகும். இதில் ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளோடு, பிரிட்டனும் ஒரு உறுப்பு நாடாக உள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளுக்காக இந்த ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கென தனி நாடாளுமன்றம் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 19 நாடுகள் யூரோவைப் பொதுப் பணமாகப் பயன்படுத்துகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் புதிய குடியேற்ற மக்களை வரவேற்கின்றன. ஆனால், பிரிட்டனின் சில தலைவர்கள், புதிதாகக் குடியேறும் மக்களால், தங்களது கலாசாரம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகக் கருதினர். இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான ஒரு வாக்கெடுப்பு, 2016 ஜூனில் பிரிட்டன் மக்களிடையே நடத்தப்பட்டது. இதில் 71 புள்ளி 8 சதவீத மக்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 51.9% மக்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக, அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், நாடாளுமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு இருந்துவருவதால், பிரெக்ஸிட் சர்ச்சை தொடர்கிறது.