இன்று அடிக்கல் நாட்டப்பட உள்ள நாட்டப்பட்ட 3 மாவட்டங்களின் நெடு நாளைய எதிர்பார்ப்பான, அத்திக்கடவு – அவினாசி திட்டத்தின் முக்கியத்துவங்கள் என்ன? கடந்த 62 ஆண்டுகளாக அத்திக்கடவு அவினாசித் திட்டம் கடந்து வந்த பாதை என்ன? இது குறித்து இந்தத் தொகுப்பில் பார்ப்போம்
அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து 2,000 கன அடி வெள்ள உபரி நீரை கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள 31 ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றியக்குளங்கள் மற்றும் 538 குட்டைகளில் நிரப்பும் ‘நீர்ப்பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கல்’ திட்டமாகும்.
இத்திட்டம் நிறைவேறும் போது, கோவை, திருப்பூர் மற்றும் ஈரோட்டில் வாழும் சுமார் 40 லட்சம் மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படும். மேலும் 10 லட்சம் மக்கள் மறைமுக பலன்களைப் பெறுவார்கள். இதுமட்டுமின்றி 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலங்களுக்கும் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மொத்தம் 843 ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் வறட்சியில் இருந்து மீட்கப்படுவார்கள்.
அத்திக்கடவு-அவிநாசித் திட்டத்தின் வரலாறு மிகப் பழமையானது. 1957 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் காமராஜரின் நண்பரும், சட்டப்பேரவை உறுப்பினருமான மாரப்பக் கவுண்டரால் தமிழக சட்டப்பேரவையில் முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டம், கடந்த 62 ஆண்டுகளாக அனுமதிகள் கிடைப்பதில் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களால் அடிக்கல் நாட்டப்படாமல் இருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் மேற்கண்ட 3 மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் 1900 அடிகள் வரை பெரும் சரிவை சந்தித்தது.
முதலில் வகுக்கப்பட்ட அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளின் அனுமதிகள் தேவைப்பட்ட நிலையில், மாநில அரசே செயல்படுத்தத்தக்க மாற்றுத் திட்டம் வகுக்கப்பட்டதாக கடந்த 2017, ஜூலை மாதம், திருப்பூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இது மூன்று மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர் 2018 ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டில், ‘அத்திக்கடவு அவினாசி திட்டத்தை 1789 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்த விரைவில் அனுமதி அளிக்கப்படும்’ என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கும் என்றும் தெரிவித்தார்.
பின்னர் கடந்த 8 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் நிதி அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தமிழக சட்டப் பேரவையில் கடந்த 12 ஆம் தேதி பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு இம்மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும், ஒப்பந்தப் பணிகள் நடந்து வருகின்றன’ என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பேச்சு, செய்தியாளர் சந்திப்பு, பட்ஜெட் மற்றும் முதல்வரின் பேரவை உரை ஆகியவற்றின் தொடர்ச்சியாக இப்போது அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
62 ஆண்டுகளாகக் கிடப்பில் கிடந்த அத்திக்கடவு அவினாசி திட்டத்தை, மாற்று வழியில் முனைந்து செயல்படுத்தும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை 3 மாவட்ட மக்களும் கொண்டாடி வருகின்றனர்.