ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பராமரிப்புப் பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க கோரப்பட்டது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்த தமிழ்நாடு அரசு, ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது.
இதற்காக இடைக்கால நிவாரணம் கோரவோ, விதிமுறைகளை கடைப்பிடிக்க கால அவகாசம் கோரவோ ஆலைக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து பதில் மனு தாக்கல் செய்ய வேதாந்தா நிறுவனம் சார்பில் கால அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.