மதுரையில் தைப்பூசத் தெப்பத் திருவிழாவுக்காக, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் வைகையாற்று நீர் நிரப்பப்பட்டு வருகிறது.
மாதந்தோறும் ஒவ்வொரு திருவிழா கொண்டாடப்படும் சிறப்பைப் பெற்றது மதுரை மீனாட்சியம்மன் கோவில். ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி மீனாட்சியம்மனும் சொக்கநாதரும், வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். தமிழகத்தில் உள்ள இரண்டாவது பெரிய தெப்பக்குளம் என்கிற பெயர் இந்தத் தெப்பக்குளத்துக்கு உண்டு. சதுர வடிவிலான இந்தத் தெப்பக் குளத்தின் ஒவ்வொரு கரையும் 304 மீட்டர் நீளம் கொண்டது.
தெப்பக்குளத்துக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் ஆல்பர்ட் விக்டர் பாலத்தின் மேல்புறத்தில் 10 கோடியே 85 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அணையின் தென்புறத்தில் மதகு அமைத்துக் கான்கிரீட் கால்வாய் மூலம் பனையூர் கால்வாய்க்குத் தண்ணீர் கொண்டு செல்லும் பணி மதுரை மாநகராட்சி மூலம் செயல்படுத்தப்பட்டது. இந்தப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்துப் பனையூர்க் கால்வாய் மூலம் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு வைகையாற்று நீர் நிரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தெப்பக்குளத்தின் நடுவில் உள்ள மண்டபத்துக்குச் சென்று வரும் வகையில் படகு வசதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.