நைஜீரியாவில் புழங்கிய உள்ளூர் வார்த்தைகளுக்கு ஆக்ஸ்போர்டு அங்கீகாரம்

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் புழங்கிய உள்ளூர் வார்த்தைகளுக்கு, உலகின் புகழ்பெற்ற ஆங்கில அகராதியான ஆக்ஸ்போர்டு அங்கீகாரம் வழங்கிய நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

ஆங்கிலம் பிறந்த பிரிட்டன் தவிர, ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் பிற நாடுகள் கூட ஆங்கில வார்த்தைகளைப் புதிது புதிதாக உருவாக்குகின்றன. இந்தப் புதிய வார்த்தைகளை அயல்நாடுகளில் வாழும் ஆங்கிலப் பண்டிதர்கள் உருவாக்குவது இல்லை, சாமானிய மக்கள்தான் தங்கள் தேவைக்கு ஏற்ப இப்படியான வார்த்தைகளை உருவாக்குகின்றனர்.

இப்படி பிற நாடுகளில் புழங்கும் புதிய வார்த்தைகளை ஆண்டுதோறும் ஆக்ஸ்ஃபோர்டு அகராதி தேர்ந்தெடுத்து, அவற்றுக்கு இடமும் அளித்து வருகின்றது. இதனால், உள்ளூரில் புழங்கும் வார்த்தைகளை உலக அரங்கிற்கு ஆக்ஸ்போர்டு அகராதி கொண்டு செல்வதுடன், ஆங்கில மொழிக்கும் புதிய சொற்களை அது கொடுக்கின்றது.

அந்த வகையில், தற்போது ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் புழங்கும் சில ஆங்கில வார்த்தைகளுக்கு ஆக்ஸ்போர்டு அகராதி இடம் அளித்திருப்பது உலகின் கவனத்தை ஈர்த்து உள்ளது. குறிப்பாக, ஆண்டின் முதல் 4 மாதங்களைக் குறிக்க நைஜீரியர்கள் பயன்படுத்திய ‘Ember Months’ என்ற வார்த்தைக்கும், நாளைய மறு நாள் என்பதை ‘டே ஆஃப்டர் டுமாரோ’ என்று குறிப்பிடும் வழக்கத்திற்கு மாறாக நைஜீரியர்கள் பயன்படுத்தும் Next tomorrow என்ற வார்த்தைக்கும், முடிதிருத்தும் நிலையத்திற்கான ஆங்கிலச் சொல்லான ‘பார்பர் ஷாப்’ என்பதைக் குறிக்கும் ‘பார்பிங் சலூன்’ என்ற வார்த்தைக்கும் ஆக்ஸ்போர்டு அகராதி இடம் அளித்து உள்ளது.

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் புழங்கிய சில உள்ளூர் வார்த்தைகளுக்கு ஆக்ஸ்போர்டு அகராதி உலகளாவிய அங்கீகாரம் வழங்கிய இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் ஆச்சர்ய அலையை எழுப்பி உள்ளது. சரியாக ஆங்கிலம் பேசுபவர்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்துகிறார்கள், தவறாக ஆங்கிலம் பேசுபவர்கள்தான் ஆங்கிலத்தை வளர்த்து எடுக்கிறார்கள்’ என்று இந்தச் செய்தியை சமூக வலைத்தளங்களில் பகிர்பவர்கள் கூறுகிறார்கள்.

Exit mobile version