உலகின் சக்திவாய்ந்த அதிபர்களில் ஒருவராக கருத்தப்படும் விளாடிமிர் புதின், அரசியல் பயணத்தில் தனது 20 ஆண்டுளை நிறைவு செய்துள்ளார்.
ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் கேஜிபி எனப்படும் உளவு அமைப்பில் தனது வாழ்க்கையை தொடங்கியவர் விளாடிமிர் புதின். 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி ரஷியா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது அப்போதைய அதிபர் எல்ட்சின் பொறுப்பு பிரதமராக விளாடிமிர் புதினை முதல் முறையாக நியமனம் செய்தார். அந்த சமயம் அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக கருதப்பட்ட பகுதிகளில் வான்வெளி வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கைகளால் புதின் ரஷ்ய மக்களிடையே புகழ்பெற்றார்.
இதையடுத்து, பல காரணங்களுக்காக அதிபராக இருந்த எல்ட்சின் தனது பொறுப்பை ராஜினாமா செய்து 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி விளாடிமிர் புதினை ரஷியாவின் பொறுப்பு அதிபராக நியமணம் செய்தார். அப்போது முதல் ரஷியாவின் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றில் தன்னை நிலைநிறுத்திவந்த புதின் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றார். இதன் காரணமாக 2024-வரை ரஷியாவில் அதிபராக புதினின் இருப்பார்.
புதின் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குடும்பம் குறித்த தகவல்களை வெளியிடாமல் இதுவரை ரகசியமாகவே வைத்துள்ளார். அவருக்கு மரியா, யெகாடெரினா என்ற 2 மகள்கள் உள்ளனர் என்பது மட்டும்தான் வெளி உலகிற்குத் தெரியும். மகள்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் இதுவரை வெளியாகவில்லை. அவர்களை அவர் வெளிநாட்டில் ரகசியமாக தங்க வைத்திருப்பதாகவும், மாதம் ஒரு முறை சென்று பார்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் அந்த ரகசியத்தை அதிபர் புதினே உடைத்துள்ளார். சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், எனது மகள்கள் வெளிநாட்டில் தங்கவில்லை. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில்தான் தங்கியுள்ளனர். தேவைப்படும்போது அவர்களை வீட்டுக்குச் சென்று பார்ப்பேன் என தெரிவித்திருந்தார்.
உலகின் சக்தி மிகுந்த நபராக இருக்கும் விளாடிமிர் புதின் அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார் என்றே கூறலாம். அதிரடி முடிவுகள், அணு ஆயுத வல்லமை என அனைத்து பிரிவுகளிலும் உலக நாடுகளுக்கு முன்னோடியாக ரஷ்யா திகழ அதிபர் புதின் தான் காரணம் என்றே கூறாலம். அதற்கு உதாரணமாக அண்மையில் ரஷ்ய ராணுவத்தில் உலகின் சக்திவாய்ந்த ஏவுகணையான ஹைபர் சோனிக் ஏவுகணையினை அண்மையில் சேர்த்ததை கூறாலாம்.
உலகளாவிய அரசியலிலும் புதின் கவனம் செலுத்துகிறார் என்கிற கருத்தும் பேசப்படுகிறது. 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் மறைமுகமாக தலையிட்டார் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பான்மை பலத்துடன் ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராவார் என கணக்கிடப்பட்டது. ஆனால், ஹிலாரி கிளிண்டனுடனான மோதல் சம்பவத்தை கருத்தில் கொண்டு அவரை தோல்வியடைய செய்ய ரஷிய அதிபர் புதின் அமெரிக்க தேர்தலில் தலையிட்டு டொனால்டு டிரம்பை வெற்றிபெற செய்தார் என பரவலான கருத்துக்கள் நிலவி வருகிறது.
இவ்வாறு பலதரபட்ட கருத்துக்கள் கூறப்பட்டாலும் ரஷ்யாவின் சக்தி வாய்ந்த அதிபராக வலம் வருகிறார் புதின். இந்நிலையில், அதிபராக பதவியேற்று தன்னை நிலைநிறுத்தி வரும் விளாடிமிர் புதின் இன்று 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.