ஹரியானா காவல்துறையினர் போதை மருந்து கடத்தல் கும்பலை பிடிக்க சென்ற போது, தீரன் பட பாணியில் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் சிர்சாவிலுள்ள, தேசு ஜோதா கிராமத்திலிருந்து, 6 ஆயிரம் போதை மாத்திரைகளை வாங்கியதாக, பஞ்சாப் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி ஒருவன் தெரிவித்தான். இதன் அடிப்படையில், போதைப்பொருள் கும்பலை சேர்ந்த குல்விந்தர் சிங்கை கைது செய்ய, அதிகாலை 5 மணியளவில் குற்றவாளிகள் இருந்த பகுதிக்கு பஞ்சாப் காவல்துறையினர், சென்றுள்ளனர்.
முதலில், குல்விந்தர் சிங் வீட்டில் சோதனை நடத்த வேண்டும் என உள்ளூர் வாசிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆனால் எதிர்பாராதவிதமாக கிராமவாசிகள் அனைவரும் திடீரென தீரன் பட பாணியில் காவல் துறையினரின் வாகனங்களை எரித்து, அவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதலில் குல்விந்தரின் மாமாவான, ஜாகா சிங் இறந்துவிட, கலவரம் தீவிரமடைந்துள்ளது. கிராமவாசிகளால் தாக்கப்பட்ட காவல்துறையினர் தங்களது தற்காப்பிற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம வாசிகள் பதிலுக்கு, இரும்புக் கம்பி, செங்கற்கள் என கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் கொண்டு கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போதைப்பொருள் கடத்தல் கும்பலும் ஊர்மக்களும் சேர்ந்து தாக்கியதில் குண்டடிபட்ட இரண்டு காவலர்கள் உள்பட 7 காவலர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஹரியானா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.