தமிழகத்தின் வோர்ட்ஸ்வோர்த் என்று இலக்கிய உலகில் அறியப்பட்ட கவிஞர், பாவலரேறு வாணிதாசனின் 106வது பிறந்தநாள் இன்று. கவிமணி, கவிஞரேறு என்று பலவாறு புகழப்பட்ட வாணிதாசனை அறிந்து கொள்வோம்…
தமிழ் இலக்கியம், பாரதியாருக்குப் பின் புதிய பரிமாணம் கொண்டது. அவரது நீட்சியாக தோன்றிய பாரதிதாசன், ஒரு கவிதா மண்டலத்தை உருவாக்கினார். அதன் நேரடி வார்ப்பு – வாணிதாசன்.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் – இவர் பிறப்பிடம். தெலுங்கு மொழிக்காரரான இவரது மனமோ, அன்னை தமிழிடம்.
பாரதிதாசனிடம் மாணவராக பயின்ற வாணிதாசன், பாடங்களுடன் பாடல்களையும் வாங்கிக் கொண்டார்.“பாரதி நாள் இன்றடா… பாட்டிசைத்துப் பாடடா” என்பதே வாணிதாசன் எழுதிய முதல் கவிதை.
தமிழ் ஆசிரியர் வாணிதாசனின் இலக்கியங்களை, தமிழன் பத்திரிகை வளர்த்தது. ரமி என்ற புனைப்பெயரில் அவர் கவிதை எழுதி வந்தபோது, வாணிதாசன் என்ற பெயரை அளித்து வாழ்த்தியது.
அதன்பின் இருந்த இலக்கிய இதழ்கள் எல்லாம், வாணிதாசனின் வார்த்தை வைரங்களைத் தாங்கின.
கொள்கைப் பாடல்கள் மூலம் தன் கவிதைகளை கொழுந்துவிடச்செய்த வாணிதாசன், ‘தமிழச்சி, கொடிமுல்லை’, ‘தொடுவானம்’ உள்ளிட்ட 10 பொன்னேடுகளை தமிழகத்துக்குப் பரிசளித்துள்ளார்.
இவரது ’வாணிதாசன் கவிதைகள்’ என்ற நூல், அழியாப் புகழைப் பெற்று வாழ்கிறது.
தமிழகத்தின் தாகூர் என்றும், வோர்ட்ஸ்வோர்த் என்றும் இவரது இயற்கைக் கவிதைகள் இமயச்சிகரம் வழங்கின. சுயமரியாதைக் கொள்கையில் பாரதிதாசனின் சீடனாக பவனி வந்தார் வாணிதாசன்.
தமது 59ம் வயதில், ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி தான் பாடிய இயற்கையுடனே கலந்தார் வாணிதாசன்.
“நானுண்டு நான்கற்ற தமிழுண்டு போதும்! நல்லோர்கள், வல்லோர்கள், நற்றமிழை யாத்தோர் தேனுண்டு, நான்வாழ்வேன்” என்ற வரிகளே இவரது அமரத்தன்மைக்கு அகச்சான்றுகள்.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக விவேக்பாரதி
Discussion about this post