கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும், வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் உத்தரப் பிரதேச விவசாயிகள் டெல்லி நோக்கிப் பேரணியாகச் செல்கின்றனர்.
உத்தரப்பிரதேச விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்த சர்க்கரை ஆலைகள் பலநூறு கோடி ரூபாய் நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது. இந்நிலையில் நிலுவைத் தொகையை வழங்கக் கோரியும், வேளாண் கடன்களை முழுவதும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் உத்தரப்பிரதேச விவசாயிகள் டெல்லியை நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெல்லி எல்லையான காசியாபாத் மாவட்டம் நொய்டாவில் விவசாயிகளைத் தடுத்து நிறுத்துவதற்காகச் சாலையில் பல இடங்களில் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டுள்ளன. நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்திச் செல்லும் தங்கள் பேரணியை அனுமதிக்க வேண்டும் என்றும், தடையரண்களை அகற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் பேரணியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி – உத்தரப்பிரதேச எல்லையில் இரு மாநிலக் காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.