காஷ்மீர் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று ரகசிய விவாதம்

சீனாவின் கோரிக்கையை அடுத்து, காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இன்று ரகசியமாக விவாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இந்த அதிரடி முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது முற்றிலும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என மத்திய அரசு தெளிவுபடுத்தியும், அதை பாகிஸ்தான் ஏற்று கொள்ளவில்லை.

இந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு பாகிஸ்தான் கடிதம் எழுதி உள்ளது. பாகிஸ்தான் கோரிக்கையை ஆதரிக்கும் வகையில், இந்த வாரத்தில் காஷ்மீர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என சீனாவும் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பகிரங்க விவாதமாக அல்லாமல், ரகசியமாக விவாதிக்க வேண்டும் என சீனா கேட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று ரகசிய விவாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version