சட்டவிரோத செயல்கள் தடுப்பு மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது.
உபா என அழைக்கப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு மசோதா மீது மாநிலங்களவையில் இன்று வாக்கெடுப்பு நடந்தது. அப்போது உபா சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக 147 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் பதிவாகின. இதனையடுத்து உபா மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதால் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று விரைவில் சட்டமாக அமலுக்கு வர உள்ளது.
மாநில காவல்துறையின் முன் அனுமதி பெறாமல், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொள்ள உபா சட்டம் அனுமதி வழங்குகிறது. தீவிரவாதத்திற்கு உதவி செய்யும் தனிநபர்களையும், தீவிரவாத செயல்களை ஊக்குவிப்பவர்களையும் தீவிரவாதியாக கருதி அவர்களிடம் விசாரணை நடத்தவும், மாநில காவல்துறையினரின் முன் அனுமதியின்றி அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்யவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு முகமைக்கு இனி வரும் காலங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நிலம் மற்றும் சொத்துக்களை பறிமுதல் செய்து விசாரிக்க அதிகாரம் அளிக்கிறது. என்ஐஏ அமைப்பிற்கு இந்த புதிய சட்ட திருத்தம் அளப்பரிய பலத்தை வழங்குகிறது. மக்களவையில் இந்த சட்ட திருத்தத்திற்கு ஆதரவாக 287 எம்.பி.க்களும், எதிராக 8 பேரும் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.