புயல்-மழையை எதிர்கொள்ள அரசு, தயாராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
அந்தமான் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் அடைந்துள்ளது. இது தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் பகுதியில் மேற்கு,வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகிற 14 ம்தேதி இரவு வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதியை நெருங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புயல் எச்சரிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார். நிவாரண முகாம்கள் மற்றும் மீட்பு குழுக்கள் அமைப்பது பற்றி தொடர் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருவதாக கூறிய அவர்,சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறினார்.