விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தாறுமாறாக ஓடிய கார் கால்வாயில் கவிழ்ந்து, விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சுழி சாலையில் நள்ளிரவு சுமார் 1 மணியளவில் 2 சொகுசு கார்கள் மின்னல் வேகத்தில் சென்றுள்ளது. அருப்புக்கோட்டை காந்திநகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் கார்களை நிறுத்த முயன்றனர். இருப்பினும் இரண்டு கார்களும் நிற்காமல் அதிவேகத்தில் சென்றதால் காவல்துறையினர் அவர்களை பின் தொடர்ந்து சென்றனர்.
இந்த நிலையில் அதிவேகத்தால் நிலைத் தடுமாறிய கார்களில் ஒன்று பேருந்து நிலையத்திலும், மற்றொன்று கால்வாயிலும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விசாரணையில் காரை ஓட்டி வந்த இருவரும் மதுரை மற்றும் கோவையைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர்கள் என்பதும், உறவினர்களின் திருமணத்திற்காக சென்ற இருவரும் மதுபோதையில் கார் ரேஸ்ஸில் ஈடுபட்டதும் தெரியவந்தது.