திருச்சி கோட்டை அருங்காட்சியகத்தில் 31 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த முத்துக்குமார், தமிழரசன் ஆகிய இருவரைச் சிலைத் திருட்டுத் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி கோட்டை அருங்காட்சியகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு 31 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் 21 பஞ்சலோகச் சிலைகள் மீட்கப்பட்டன. இவ்வழக்கு தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காரைக்குடியைச் சேர்ந்த முத்துக்குமார், திருப்பத்தூரைச் சேர்ந்த தமிழரசன் ஆகிய இருவர் கடந்த 10 ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தனர்.
இந்நிலையில் இருவரையும் சிலைத் திருட்டுத் தடுப்பு காவல்துறையினர் கைது செய்து கும்பகோணத்திலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் வரும் 31ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.