தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 84 ஆயிரத்து 502 மெட்ரிக் டன்களை கொண்ட பெரிய கப்பலை கையாண்டு சாதனை படைத்துள்ளது.
வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சரக்கு தளத்தில் எம்.வி. ஸ்பகியா வேவ் என்ற கப்பல் நேற்று மாலை வந்தடைந்தது. சைப்ரஸ் நாட்டைச்சேர்ந்த எம்.வி.ஸ்பகியா வேவ் எனும் அக்கப்பல், சுமார் 229 மீட்டர் நீளமும் 36.80 மீட்டர் அகலமும் கொண்டு பிரம்மாண்டமாகத் திகழ்கிறது. குறிப்பாக, அக்கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள “மினா சகர்” என்ற துறைமுகத்திலிருந்து 84 ஆயிரத்து 502 டன் எடைகொண்ட சுண்ணாம்பு கல்லை, சென்னையின் கிழக்கு வர்த்தக நிறுவனத்திற்காக எடுத்து வந்துள்ளது. இத்தகைய அதிக மிதவை ஆழம் கொண்ட கப்பல்களை கையாளுவதன் மூலம் அதிவிரைவில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் சரக்கு மாற்று முனையமாக திகழும் வாய்ப்பு உள்ளதாக அத்துறை வல்லுநர்கள் தெரிவித்தனர்.