புஸ்வானம் ஆகிப்போன “பரிசுப்பெட்டி”

நடந்து முடிந்த 17வது நாடாளுமன்ற, 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் அமமுக தலைவர் தினகரனுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

போட்டியிட்ட 40 நாடாளுமன்ற தொகுதிகள், 22 சட்டமன்ற தொகுதிகள் அனைத்திலும் டெபாசிட் கூட வாங்காமல் அவரை நம்பி சென்றவர்கள் மண்ணை கவ்வியுள்ளனர். தினகரன் கட்சி வேட்பாளர்கள் அதிமுகவின் வாக்குகளை பிரிப்பார்கள் என அவர்கள் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் சொன்னார்கள்.

ஆனால் அவர்களுக்கு தேர்தலில் மக்கள் தக்க பாடத்தை கொடுத்துள்ளனர். அதிமுக, திமுகவிற்கு மாற்று என கூறப்பட்ட அமமுக அனைத்து தொகுதிகளிலும் சொற்ப அளவிலான வாக்குகளை மட்டுமே பெற்று பெரும்பாலான தொகுதிகளில் 5வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

எப்படியாவது அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என கூறிக்கொண்டு திரிந்த அந்த கட்சியின் தளபதிகளாக கருதப்பட்ட தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் போன்றவர்கள் தேர்தலில் டெபாசிட் வாங்காமல் படுதோல்வியடைந்தது அந்த கட்சியை சேர்ந்த அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. பல இடங்களில் அதிமுகவின் வாக்குகளை தொட முடியாத அளவிலேயே அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்டனர். அவர்களது சின்னமான பரிசுப்பெட்டியில் மக்கள் தோல்வியை அன்பளிப்பாக அளித்துள்ளனர். இது கட்சியினரிடையே தினகரன் மீது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் தினகரனின் எண்ணங்கள் புஸ்வானமாகி விட்டது என்பது நிரூபணமாகியுள்ளது . உண்மையான அதிமுக நாங்கள் தான் என்ற தினகரனுக்கு தேர்தல் முடிவுகள் மூலம் மக்களே பதில் சொல்லிவிட்டனர்.

Exit mobile version