சிமெண்ட் கற்கள் மூலம் அதிவிரைவு ரயிலை கவிழ்க்க முயற்சி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிமெண்ட் கற்களை கொண்டு அதிவிரைவு ரயிலை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையின் கள்ளிக்குடி ரயில்வே தண்டவாளத்தில் தூத்துக்குடியில் இருந்து சென்னை சென்ற முத்துநகர் விரைவு ரயில் அதிவிரைவாக சென்றது. அப்போது தண்டவாளத்தில் இருந்த கல்லில் மோதிய சத்தம் கேட்டுள்ளது. இதுகுறித்து ரயில் ஓட்டுநர் திருமங்கலம் ரயில்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக மதுரை மற்றும் விருதுநகர் ரயில்நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு, சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தண்டவாளத்தில் ரியல் எஸ்டேட் ஊன்ற பயன்படுத்தப்படும் சிமெண்ட் கற்களை கொண்டு ரயிலை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்தது.

அதிவிரைவு ரயில் என்பதால் முத்துநகர் விரைவு ரயில், சிமெண்ட் கல்லை மோதி சுக்குநூறாக்கி கடந்து சென்றுள்ளது. இதனால், அசம்பாவித சம்பவம் ஏதும் ஏற்படாமல் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டுள்ளது.

மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version