“புகைப்பிடித்தல் புற்றுநோயை விளைவிக்கும் மற்றும் உயிரைக் கொல்லும்” திரைப்படங்களின் சடங்கு சம்பிரதாயங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட சிகரெட் எதிர்ப்பை அதிகாரப்பூர்வமாக புகையிலை எதிர்பு தினமாக கடைபிடிக்கும் நாள் இன்று.
புகை எல்லோருக்கும் பகை. பிடிப்பவருக்கு, பிடிப்பவருக்கு பிடித்தவருக்கு, பிடித்தவர் போன வழியில் நடந்தவருக்கு, பிடிக்காமல் இருமியபடி கடந்தவருக்கு என எல்லோருக்கும் புற்றுநோய் தரும் வல்லமை கொண்டது புகையிலை.
புகைபிடித்தல் கூடாது என்பது எல்லோருக்கும் நன்கு தெரிந்த செய்திதான். ஆனால், ஆண்டுதோறும் புகையிலை எதிர்ப்புக்கு என்று தனிப்பட ‘தினம்’ ஒன்றைக் கடைபிடிக்க வேண்டிய அவசியம் என்ன?
அவசியமற்ற உயிரிழப்புகள் அதிகரித்துதான், புகையிலை ஒழிப்புக்கான அவசியத்தை உணர வைத்தது எனலாம். 2020ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆண்டொன்றுக்கு சராசரியாக 80 லட்சம் பேர் புகையிலையால் இறக்கிறார்கள். இதில் 10 முத 12 லட்சம் பேர் புகைபிடிக்காதவர்கள் ஆனால், புகைபிடிப்பவர்களோடு பழகியவர்கள் என்பதுதான் இன்னும் சங்கடமான செய்தி. இந்த சங்கடம் கவனிக்கத்தக்க அளவுக்கு காவுகளை வாங்கிய ஆண்டுதான் 1986.
அதன்பிறகு சர்வதேச கவனம் கொடுக்கப்பட்டு, 1987முதல் புகையிலை ஒழிப்பையும் இலக்காகக் கொண்டு ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இதன் விளைவாகவே, உலக புகையிலை எதிர்ப்பு நாள் உலகெங்கும் மே 31 ஆம் நாளன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பு நாடுகள் சேர்ந்து இந்நாளை 1987ம் ஆண்டில் சிறப்பு நாளாக அறிவித்தன. ஆண்டுதோறும் புகையிலை சம்பந்தமான சுமார் 3.5 மில்லியன் இறப்புகளைக் குறைக்க முடியும் என்பதே தொடர்ந்து எதிர்பார்ப்பாகவும் இலக்காகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. எது எப்படியானாலும், திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.