கைதான கார்த்திகேயன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பு

திமுகவை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேரை கொலை செய்த வழக்கில், கைதான கார்த்திகேயனை அடுத்த மாதம் 14 ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

திமுக-வை சேர்ந்த முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகியோர் கடந்த 23 ஆம் தேதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திமுக உட்கட்சி மோதலில் கொலை நிகழ்ந்ததாக தெரிகிறது. திமுக நிர்வாகி சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனுக்கு கொலையில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையின் கிடுக்கிபிடி விசாரணையில் கொலை செய்ததை கார்த்திகேயன் ஒப்புக்கொண்டார்.

திமுகவில் கட்சி பதவி பெறுவதிலும், தேர்தலில் போட்டியிட சீட் வாங்குவதிலும் ஏற்பட்ட உச்சகட்ட மோதலே கொடூர கொலைக்கு காரணம் என்ற அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே கைது செய்யப்பட்ட கார்த்திகேயன், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு 5-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் நேற்றிரவு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நிஷாந்தினி உத்தரவிட்டதை தொடர்ந்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் கார்த்திகேயன் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை, கொலை நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரித்தனர். அப்போது, உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் பணிப்பெண்ணை கொலை செய்தது எப்படி என்று கார்த்திகேயன் தத்ரூபமாக நடித்து காண்பித்தார். கொலை செய்த பின்னர் தடயங்களை அழித்ததையும், வழக்கை திசைத் திருப்ப நகைகளை திருடி சென்றதையும் அவர் நடித்து காட்டினார்.

இந்த வழக்கில், சிபிசிஐடி காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், கைதான கார்த்திகேயனின் தாயாரும், திமுக நிர்வாகியுமான சீனியம்மாள், அவரது கணவர் சன்னியாசி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல், கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரியின் மகளுக்கும் சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது.

Exit mobile version