திருச்சி மாநகராட்சியின் 25-ம் ஆண்டையொட்டி ரூ.71.50 லட்சம் மதிப்பில் உருவாகும் பூங்கா

திருச்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, 25 ஆம் ஆண்டு துவங்கியதையொட்டி, மாநகரில் 71 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வெள்ளி விழா பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்சி நகராட்சி, 1994ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. 24 ஆண்டுகள் கடந்து, 25 ஆம் ஆண்டு துவங்கியதை கருத்தில் கொண்டு மாநகராட்சி சார்பில் நினைவு பூங்கா அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், திருச்சி பொன்மலை கோட்டத்தில் உள்ள நியூ ராஜா காலனியில் 71 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 9 ஆயிரத்து 600 சதுர அடி பரப்பளவில் வெள்ளி விழா நினைவு பூங்கா அமைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

தற்போது அங்கு தியான மையம், நீரூற்று, சிறுவர்களுக்கான சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், சிறிய அளவிலான ராட்டிணம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளது.

அதே போல் ராணுவ பீரங்கிகள், செயற்கை புல் தரைகள், நடைபாதைகள் அமைக்கும் பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. மேலும், பொழுதுபோக்கிற்காக வரும் மக்களின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. விரையில் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வர உள்ள இந்த வெள்ளி விழா நினைவு பூங்கா பொது மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Exit mobile version