செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான கருவி…

செவித்திறன் குறைபாடு உடையவர்கள் இருசக்கர வாகனத்தை இயக்கும் போது பின்னால் வரும் வாகனங்களை உணர்வதற்காக முழுவதுமாக சென்சார்களால் இயங்கக்கூடிய கருவியை உருவாக்கி அருப்புக்கோட்டையில் அரசு உதவிபெறும் தனியார் மேல்நிலை பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.

செல்வத்தில் சிறந்த செல்வம் செவிச்செல்வம் என்றார் வள்ளுவர். ஐம்புலன்களில் ஒன்றான செவி உணர்தல் அறிவை அடைவதற்கான வழி மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றி நடப்பவைகளை கேட்டு விழிப்புணர்வு அடையவும் வைக்கிறது. செவித்திறன் குறைபாடு உடையவர்கள் தனித்துவமான கருவிகள் கொண்டு காது கேட்கும் திறனை பெற்றிருந்தாலும், சாதாரண மனிதர்கள் அளவுக்கு செவித்திறன் குறைபாடு உடையவர்களால் கேட்க முடியாது. அந்த வகையில், இருசக்கர வாகனம் ஓட்டும் செவித்திறன் குறைபாடு உடையவர்கள் பின்னால் வரும் வாகனங்களை அதிர்வலைகள் மூலம் உணரும் வகையில், முழுவதும் சென்சார்களால் இயங்கக்கூடிய கருவியை, அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெரும் தனியார் பள்ளியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் ரம்யா, ஐஸ்வர்ய லட்சுமி, மதுமிதா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தபடியே இதற்கான முயற்சிகளை மாணவிகள் மேற்கொண்டுள்ளனர். ஆய்வக பயிற்சியாளர் இந்துமதி வழிகாட்டுதல்படி மாணவிகளின் தீவிர முயற்சியின் மூலம் அல்ட்ரா சோனிக் சென்சார்கள், ஆர்டினோ போர்டுகள் மற்றும் வைப்ரேட்டர்களை பயன்படுத்தி ஆயிரத்து 200 ரூபாய் செலவில் எளிய முறையில் இந்த கருவியை வடிவமைத்துள்ளனர்.

இருசக்கர வாகனத்தின் பின்னால் பொருத்தப்படும் சென்சார்கள், வலது பக்கமும், இடது பக்கமும், வாகனங்கள் வருவதை உணர்ந்து ஆர்டினோ போர்டுகள் மூலம் ஹேண்டில் பார்களில் பொருத்தப்பட்டிருக்கும் வைப்பரேட்டருக்கு சமிஞ்கைகளை அனுப்புகிறது. இதனால் வைப்பரேட்டர் அதிரும் போது பின்னால் வாகனங்கள் வருவதை வாகன ஓட்டிகள் எளிதாக உணரலாம்.

தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் செவித்திறன் குறைபாடு உடைய சகோதரி, காது கேட்கும் கருவியை பொருத்திக்கொண்டு இருசக்கர வாகனத்தை இயக்கும் போது வாகனங்களில் இருந்து வரும் அதிக ஒலி காதுகளில் இரைச்சலை ஏற்படுத்துவதாகவும், அதிகப்படியான இரைச்சல் மற்றும் ஒலியால் சிரமமாக இருப்பதாக வேதனையுடன் கூறியதே, தான் இந்த கருவியை உருவாக்க, உந்துதலாக அமைந்ததாக கூறுகிறார் மாணவி ஐஸ்வர்ய லட்சுமி. தன்னுடன் படிக்கும் மாணவிகள் ரம்யா, மதுமிதா ஆகியோருடன் இணைந்து இந்த சாதனையை படைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாங்கள் உருவாக்கி இருக்கும் இந்த கருவி, செவிதிறன் குறைபாடு உடையவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் எனவும் வாகனத்தை தயாரிக்கும் போது இதை எளிதாக பொருத்திக் கொள்ளலாம் எனவும், மாணவிகள் தெரிவித்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், அதனை விடுமுறையாக கருதாமல், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் மாணவிகளின் செயல் பாராட்டுக்குறியது.

நியூஸ் ஜெ செய்திகளுக்காக அருப்புக்கோட்டையிலிருந்து செய்தியாளர் ராஜசேகர்….

Exit mobile version