இன்று உலகளாவிய மனிதநேய தினம்…

மனிதராய் பிறந்திட நல்ல மாதவம் செய்திருக்க வேண்டும் என்பார்கள், அப்படி மனிதராக பிறந்து மானுடம் புரிந்து வாழ்பவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தினம் இன்று. உலக மனிதத்தன்மை தினம். இது குறித்த தொகுப்பினை தற்போது காணலாம்..

வாழ்வில் செல்வத்தை சேர்ப்பதினும் பெரும் மனமகிழ்ச்சி தரும் ஒன்று நல்ல மனிதன் என்ற பெயரை பெறுவது தான். அப்படி நல்ல மனிதன் என்ற பெயரை சேர்ப்பது எளிதான காரியமல்ல. தன் வாழ்வையும் பேணி அதேசமயம் மற்றவர் நலனையும் சிந்தையில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே சாதனை மனிதன் என பாருலகில் சான்றாகி நிற்க முடியும். அப்படி சாதனை மனிதனாக வாழ்பவர்கள் மட்டுமே இந்த தினத்தின் நிஜ ஹீரோக்கள். மனித நேயம் என்பதற்கு அளப்பறிய பெரிய சாதனைகள் மட்டும்தான் செய்ய வேண்டுமா..? என்றால் அப்படியல்ல… அனுதின வாழ்வில் நித்தமும் நேர்மை மற்றும் அகத்தினுள் பிறர் நலனும் கருதினாலே போதும். அப்படி வாழ்ந்தவர்கள் பலர் உண்டு.. அதில் முக்கிய பங்கு பெற்றவர் அன்னை தெரேசா.

கருவுற்றிருந்தால் ஒரு குழந்தைக்கு தாயாகியிருப்பால், அவரோ கருணையுற்றுவிட்டார், உலகின் கடை குழந்தைக்கும் தாயாகி விட்டார்…. நமது அன்றாட வாழ்வில் நமது தேவைக்கு மிஞ்சிய எதையும் தேவை உள்ள ஒருவருக்கு கொடுத்தாலே போதும் அதுவே ஒரு மனிதநேய செயல்தான். கண் முன் ஒருவனுக்கு உதவி தேவை என்றால் உடனடியாக உதவ வேண்டும்… அதுதான் மனிதநேயம். மாறாக அதனை படமாக பதிவெடுத்து முகநூலில் ஏற்றுவது மனிதநேயம் அல்ல… இந்த நன்னாளிலாவது சிந்திப்போம்… இன்று முதல் மனிதநேயத்துடன் வாழ்வோம் என உறுதியேற்போம்.

Exit mobile version