சந்தியா முதல் ஜானு வரை : த்ரிஷா பிறந்தநாள் ஸ்பெஷல்

தமிழ்சினிமாவின் அபி,ஜானு,ஜெஸ்ஸி,ஹேமானிகா என்ற பெயர்களை கேட்டால் நிச்சயம் நம் நினைவுக்கு வருபவர் த்ரிஷா தான். இவையெல்லாம் வெறும் பெயர்கள் அல்ல…அவருக்கான சினிமாவின் அடையாளங்கள்.

“வா..வா..என் தேவதையே” பாடலாகட்டும்…. “காதலே காதலே…தனிப்பெரும் துணையே… என்ற பாட்டாகட்டும் அதன் வழியே இன்றும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்பெஷலாகவே இருக்கும் த்ரிஷாவிற்கு இன்று பிறந்தநாள்.

2002ம் ஆண்டு தொலைக்காட்சி, ரேடியோக்களில் “என் அன்பே..என் அன்பே..என் கண்ணுக்குள் கவிதாஞ்சலி” என தொடங்கும் அந்த பாடல் காதலர்களின் கீதமாக ஒலிக்க அதன் பிண்ணனியில் மெளனம் பேசியதேவில் சந்தியாவாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார் த்ரிஷா. ஆனால் நடிக்க தொடங்கிய முதல் படமோ இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் லேசா..லேசா.. அதற்குள் மெளனம் பேசியதே வெளியாக அறிமுகப் படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்றார் த்ரிஷா. அதே ஆண்டு அவரிம் மூன்றாவது படமாக சாமி வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் தாக்கம் தமிழ் சினிமா த்ரிஷாவை கொண்டாட துவங்கியது.

1983ம் ஆண்டு மே4ல் பிறந்த த்ரிஷா சர்ச் பார்க்கில் ஸ்கூலிங் முடித்தார். தனது கல்லூரி படிப்பை எத்திராஜ் கல்லூரியில் படித்தார். படிக்கும்போதே மாடலிங்கில் ஆர்வம் வர 1999ல் மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற கையோடு 2001ல் மிஸ் இந்தியா போட்டியில் ப்யூட்டிஃபுல் ஸ்மைல் விருதை தட்டிச் சென்றார்.

2004ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தில் தனலட்சுமியாகவே தனிமுத்திரை பதித்திருப்பார். அந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. அந்த படத்தில் வரும் அப்படிப்போடு பாடல் அவரை சிறியவர் முதல் பெரியவர் வரை கொண்டு சேர்த்தது என்றே சொல்லலாம். அடுத்த சில வருடங்களுக்கு அந்த பாட்டு இல்லாமல் ஸ்கூல், காலேஜ் விழாக்களே இல்லை என்றே கூறலாம். அதன் பிறகு த்ரிஷா காம்போ என்றாலே படம் நிச்சயம் சக்சஸ்தான் என்ற அளவிற்கு கோலிவுட், டோலிவுட் என கனவுக்கன்னியாக ஜொலித்தார் த்ரிஷா.

‘உனக்கும் எனக்கும்’படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடிப்பில் கலக்கியவர், 2008ல் வெளியான “அபியும் நானும்” படத்தில் பிரகாஷ்ராஜின் செல்ல மகள் அபியாக நடித்து தமிழ்நாட்டின் அனைத்து வீடுகளிலுள்ள அப்பாக்களின் செல்ல மகளாகவே மாறினார். மகளதிகாரம் கொண்ட பாடல்களின் வரிசையில் வா..வா..என் தேவதையே பாடல் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற அளவுக்கு இப்போதுவரை அப்பா- மகளின் ஆல்டைம் பேவரைட்டாக தினமும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் வலம் வந்துக்கொண்டே இருக்கிறது அந்த பாடல்.

இவர் நடித்த காலக்கட்டத்தில் நயன்தாரா, அசின் போன்றவர்கள் போட்டிக்கு இருந்தாலும் அவ்வப்போது தனது பேர் சொல்லும் படங்களிலும் நடித்தார். குறிப்பாக விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமல்லாமல் தெலுங்கு சூப்பர் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்தார்.

2010ம் ஆண்டு த்ரிஷாவிற்கு முக்கியமான ஆண்டு என்றே சொல்லலாம். “விண்ணைத்தாண்டி வருவாயா” படம் த்ரிஷாவுக்கு வேற லெவல் வெற்றியை தேடித்தந்தது. ஜெஸ்ஸியை நினைத்து உருகும் கார்த்திக்காக தங்களது காதலை நினைத்துக்கொள்ளும் ஆயிரமாயிரம் காதலர்கள் இன்றளவும் உண்டு என்றால் நினைத்துப்பாருங்கள். அவருடைய திரையுலக வாழ்வில் நடிப்பிற்கு இந்த ஒருபடமே போதும் என்கிற அளவுக்கு ஜெஸ்ஸியாகவே வாழ்ந்திருப்பார் த்ரிஷா.

இதன்பிறகு என்றென்றும் புன்னகை, என்னை அறிந்தால், கொடி என தன் பேர் சொல்லும் படங்களில் நடித்தார் த்ரிஷா. அதிலும் கொடி படத்தில் “ருத்ரா”வாக நெகட்டிவ் கேரக்டரில் மிரட்டியிருப்பார். அவரின் நடிப்பில் 50வது படமாக அரண்மனை-2 வில் நடித்தார்.

எப்படி “விண்ணைத்தாண்டி வருவாயா” ஜெஸ்ஸியை யாராலும் மறக்க முடியாதோ..அதைவிட பல மடங்கு தன்னால் நடிக்க முடியும் என்பதை மீண்டும் “96” படத்தில் நடித்துக் காட்டினார் த்ரிஷா. “ஜானு” வாக அவர் நடிப்பை பார்த்து பிரமிக்காதவர்கள் இல்லை. குறிப்பாக 90களில் பிறந்தவர்கள்.

இளசுகள் முதல் பெருசுகள் வரை நிறைவேறாத தங்களது காதலை எண்ணி வருத்தப்பட்டு கொண்டிருந்த வேளையில் அந்த காதலியின் முகத்தை நினைவுப்படுத்தும் அளவுக்கு ஜானுவாகவே நடிப்பில் ஒரு கை பார்த்திருப்பார் த்ரிஷா. என்றுமே நடிப்பில் தான் ஒரு ஸ்டார் என்பதை வெகு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிரூபித்தார்.

இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், “கில்லி” தனலட்சுமி, “உனக்கும் எனக்கும்” கவிதா, “அபியும் நானும்” அபி,“விண்ணைத்தாண்டி வருவாயா” ஜெஸ்ஸி, “என்றென்றும் புன்னகை”பிரியா, “என்னை அறிந்தால்” ஹேமானிகா, “கொடி”ருத்ரா, “96” ஜானு என்று அவரது பெயர் சொல்லும் கிளாசிக் கேரக்டர்கள் அவரது திரையுலக பயணத்தின் மைல்கல். 2000க்குப் பிறகு வந்த கதாநாயகிகளில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து 19 ஆண்டுகளாக நடித்து வரும் நடிகை என்ற புகழுக்கு சொந்தக்காரர்.

சினிமா வாழ்க்கையை தவிர்த்து செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர் த்ரிஷா. மேலும் யுனிசெஃப் அமைப்பின் நல்லெண்ண தூதராக 2017ம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.

த்ரிஷா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவர். அவரின் வாழ்க்கை வரலாறு குறித்து படமெடுத்தால் தான் நடிக்க விரும்புவதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அந்த அன்பின் உச்சமாக இன்றளவும் டிவிட்டர் அக்கவுண்டில் தனது பக்கத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கையால் விருது பெறும் புகைப்படத்தை கவர் போட்டோவாக வைத்துள்ளார். இன்று கதையின் நாயகியாக நடித்துக் தனக்கென ரசிகர்களை கொண்டிருக்கும் த்ரிஷாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

Exit mobile version