மேடி என்றாலே கிரேஸ் ..

2000ம் காலக்கட்டத்தில் தங்களுடைய இளமைப்பருவத்தில் வலம் வந்துக்கொண்டிருந்த ஆண்கள் ஒருபக்கம் விஜய்,அஜித்துக்காக அடித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் பெண்களுக்கு இந்த பெயரை கேட்டால் அப்படி ஒரு ஆனந்தம். நிச்சயம் அப்போது விஜய், அஜித் போன்றவர்களையெல்லாம் ஓரம் கட்டி கனவு மன்னனாக திகழ்ந்தார் நடிகர் மேடி…மாதவன்..1970ல் ஜூன் 1ம் தேதி பிறந்த மாதவன் இன்று தனது 49வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

ஜாம்செட்பூரில் பிறந்த மாதவன் எலெக்ட்ரானிக்ஸ் பிரிவில் பட்டம் வாங்கியவர். ராணுவத்தில் சேர ஆசைப்பட்ட மாதவனுக்கு என்.சி.சி முதல் அதற்காக அளிக்கப்பட்ட பயிற்சிகள் வரை கைகொடுத்தது. ஆனால் கடைசியில் வயதின் காரணமாக நிராகரிக்கப்பட்டார்.

அதேசமயம் கல்லூரி காலத்தில் மாடலிங்கில் ஆர்வம் வர ஏஜென்சிகளுக்கு போட்டோக்களை அனுப்பி வைத்துள்ளார். அந்த நேரத்தில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் விளம்பர நிறுவனத்தில் வேலையும் மாதவன் பார்த்து வந்தார். அதுவே அவரை மணிரத்னத்திடம் அறிமுகப்படுத்தியது. அவரின் ‘இருவர்’ படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்த போது அவரின் இளமையான கண்களால் நடிக்க முடியாமல் வாய்ப்பு பறிபோனது. ஆனால் மணிரத்னம் இவரை மறக்கவில்லை.

முதன்முதலில் ‘இஸ் ராத் கி சுபாக் நகின்’ என்ற இந்திப் படத்தில் அறிமுகமானார் மாதவன். படமும் இவரது கேரக்டரும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஆனால் இரண்டாவது படம் ஹாலிவுட்டில் நடித்தார். மூன்றாவதாக ‘சாந்தி சாந்தி சாந்தி’ என்ற கன்னடப்படமும் அவருக்கு திரையுலகில் அடியெடுக்க உதவியது. இதன்பிறகு தான் தமிழில் ‘அலைபாயுதே’ கார்த்திக்காக அறிமுகமானார் மேடி. அதுவும் இருவர் படத்தின்போது தன்னை நிராகரித்த அதே மணிரத்னத்தால். காரணம் படத்தின் கதை இளம்வயதினரை பற்றி என்பதால் மணிரத்னம் இவரை தேர்வு செய்தார். முதல் நான்கு படங்கள் நான்கு வெவ்வேறு மொழிகளில் நடித்த சிறப்பு மாதவனுக்கு உண்டு.

அலைபாயுதேவில் காதில் வாக்மேனும் கையுமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான மாதவன் முதல் படத்திலேயே பெற்ற புகழ் மட்டும் தான் இன்றளவும் அவரை மறக்காமல் வைத்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அவருடைய ஸ்கிரீன் பிரசென்ஸ் தான். இந்த படத்தில் வரும் காதல் காட்சிகளுக்கு தமிழ் சினிமாவின் டாப் 10ல் கண்டிப்பாக இடமுண்டு. இந்த படத்தில் நம்மை மெய்மறந்து ரசிக்க வைத்திருப்பார். மணிரத்னமே, மாதவனோ மீண்டும் அப்படியான படங்களை கொடுக்க முடியாது. அப்படியான ஒரு காதல் காவியமாக மாறிப்போனது.

அந்த ஒரு படம் தான் மாதவனை தமிழ்நாட்டு பெண்களுக்கு கனவுக்கண்ணனாக மாறினார். அவர்மேல் காதல் பித்து பிடித்தே அலைந்தனர். அதே ஆண்டில் அவர் நடித்த ‘என்னவளே’ திரைப்படம் வெளியானது. ஆனால் படம் வெற்றியடையவில்லை.

அந்த சமயத்தில் மணிரத்னம் இவரிடம் படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து நடிக்க சொல்ல, உடனே மாதவன் தனது அடுத்த படத்தின் இயக்குநரை கையோடு கூட்டிக்கொண்டு மணியிடம் சென்றாராம். படத்தின் கதையை இயக்குநர் சொல்ல இந்த படம் வேண்டாம் என்று மாதவனிடம் மணிரத்னம் சொன்னாராம். ஆனால் விதி யாரை விட்டது. மாதவனே அந்த கதையில் நாயகனாக நடிக்க பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. அந்த படம் தான் ‘மின்னலே’.

அவரை நினைக்கும் போதெல்லாம் எப்போது சிரித்தமுகம் தான் நியாபகம் வரும் . ஆனால் நிஜத்தில் மிகுந்த கோபக்காரர் மாதவன்.

தமிழில் எண்ணிப்பார்க்கும் அளவிலேயே படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஒவ்வொரு படமும் வெவ்வேறு கதைக்களங்களில் நடித்து வித்தியாசம் காட்டியிருப்பார். மின்னலேவை தொடர்ந்து ‘டும் டும் டும்’ படங்களில் நடித்து ரசிகர்களை தன்பால் இழுத்தார். குறிப்பாக பெண் ரசிகைகளை. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் ‘பார்த்தாலே பரவசம்’படத்தில் நடித்தார்.

காதல் படங்களில் மட்டுமே நடித்த மாதவனை 2002ல் மீண்டும் மணிரத்னம் தனது இயக்கத்தில் இலங்கை தமிழர்களை மையப்படுத்திய கதையில் இரு குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்தார். இந்த படம் பல தேசிய விருதுகளை வென்றது. மாதவனுக்கு தமிழக அரசின் ‘சிறந்த நடிகர்’ விருது கிட்டியது. அடுத்து வெளிவந்த அடுத்ததாக ‘ரன்’ படத்திற்காகவும் தமிழக அரசின் ‘சிறந்த நடிகர்’ விருதினை இரண்டாவது முறையாக வென்றார்.

நடிகர் கமலுடன் இணைந்து நடித்த படமான ‘அன்பே சிவம்’ மாதவனுக்கு மூன்றாவது முறையாக தமிழக அரசின் ‘சிறந்த நடிகர்’ விருதினை பெற்று தந்தது. அப்போது வெற்றியடையாத இந்த படம் இப்போது தமிழின் சிறந்த படங்களில் ஒன்று.

இதன்பின் நளதமயந்தி, லேசா லேசா, ப்ரியமான தோழி, ஜேஜே, எதிரி என வெவ்வேறு ஸ்டைலில் மாஸ் காட்டினார். அதிலும் ‘ஜேஜே’ படம் காதலர்களால் கொண்டாடப்பட்டது.

ஒவ்வொரு முறையும் மாதவன் மீது ‘லவ்வர் பாய்’ இமேஜ் விழும் போது அதனை உடைத்தெறிபவராக இருப்பவர் மணிரத்னம் தான். ஆனால் இந்தமுறை சற்று வித்தியாசமாக மாதவனை மொட்டையடித்து வில்லத்தனமான ‘இன்பா’வாக “ஆய்த எழுத்து” படத்தில் மிரட்ட வைத்தார். 2005 முதல் 2009 வரை அவர் பிரியசகி, தம்பி, ரெண்டு, ஆர்யா, எவனோ ஒருவன், வாழ்த்துகள், யாவரும் நலம் என நடித்தாலும் ஒரு சில படங்கள் தவிர, அவருக்கு எதிர்பார்த்த வெற்றிகள் கிட்டவில்லை. அதிலும் வாழ்த்துகள் படத்தில் முழுக்க முழுக்க தமிழ் வசனங்கள் மட்டுமே பேசியிருப்பார். சில படங்களில் கேமியோ கேரக்டர்களில் நடித்திருப்பார்.

என்னதான் மாதவன் தமிழ் படங்களில் நடித்தாலும் அவ்வப்போது இந்தி படங்களில் தனது நடிப்பை கொண்டு சேர்ப்பார். கடைசியாக 2012ல் ‘வேட்டை’ படத்திற்கு பிறகு அவர் தமிழ் சினிமா பக்கமே சில ஆண்டுகளுக்கு வரவில்லை.

கிட்டதட்ட 4 வருடங்களுக்கு பிறகு வேறு மாதவனாக ‘இறுதிச்சுற்று’ படத்தில் கம்பேக் கொடுத்தார். பாக்ஸ் ஆபிசில் ஹிட்டடித்த இந்த படத்தில் வித்தியாசமான ஹேர்ஸ்டைல் கொண்டு நடித்தாலும் ரசிகர்களின் மனதில் ‘அலைபாயுதே’ மாதவனின் முகம் மட்டுமே இன்றளவும் பதிந்துள்ளது. தனது 50வது படமாக இந்தியில் ‘தனு வெட்ஸ் மனு-2’ படத்தில் நடித்தார்.

இதனையடுத்து இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாரயணனின் பயோகிராபியில் நடிப்பதற்காக 2 வருடங்களாக தாடி, மீசை என தனது தோற்றத்தையே மாற்றி மாதவன் தானா?என்ற சந்தேகத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தினார். இந்த படத்தில் இயக்குநராகவும் தனது அடுத்த பரிணாமத்தை எடுத்துள்ளார்.

மேடி என்ற கிரேஸ் இன்றளவும் ரசிகர்களிடம் உள்ளதென்றால் அதற்கு காரணம் அவரின் மேனரிசங்கள் மட்டுமல்ல அவரின் தன்னம்பிக்கையும் தான்..பல சோதனைகள் வந்தாலும் அதனை உடைத்தெறிந்து வித்தியாசமாக எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் அவரிடம் இருக்கும். அதுவே அவரை கொண்டாடவும், வாழ்க்கையில் மறக்காமலும் வைக்கிறது.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ஆர்.மாதவன்….!

Exit mobile version