தமிழகம் முழுவதும், இன்று 43 ஆயிரம் மையங்களில், போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி, சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம், 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. சொட்டு மருந்து மையங்கள் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. விடுபடும் குழந்தைகளைக் கண்டறிய சொட்டு மருந்து வழங்கப்படும் குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை வைக்கப்படுகிறது. இதற்கான பணியில் தனியார் மருத்துவர்களும், மருத்துவமனைகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
சொட்டு மருந்து வழங்கும் பணிக்காக, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், முகாம் நாளில், பயணத்தில் இருக்கும் குழந்தைகளின் வசதிக்காக, முக்கிய பேருந்து, ரயில், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகளில், ஆயிரத்து 652 பயண வழி மையங்கள் நிறுவப்பட்டு சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்கும் வகையில், ஆயிரம் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார, அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
Discussion about this post