சோளிங்கரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட 7 கோடியே 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நீதித்துறை சிறப்பாக செயல்பட தமிழக அரசு பல்வேறு ஒத்துழைப்புகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்கள் சொந்தக் கட்டடத்தில் இயங்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கையால், அதிக எண்ணிக்கையிலான நீதிமன்றங்கள் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
அண்மையில், வேலூர் மாவட்டம் சோளிங்கரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை கட்ட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நிலையில், சோளிங்கர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட, தமிழக அரசு 7 கோடியே 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.
நீதிமன்ற அதிகாரிகளுக்கான குடியிருப்புகள், வாகன நிறுத்துமிடங்கள், ஜெனரேட்டர் அறைகளுடன் கூடியதாக இந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு, அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.