வீட்டுச் சூழ்நிலையால் ஆசிரியர் கனவோடு, தந்தையுடன் சேர்ந்து கறிவெட்டும் திருப்பூர் மாணவி

சாதிக்கவேண்டும் என்ற லட்சியம் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் இருக்கும்…. அந்த வகையில், ஆசிரியர் ஆவதே தனது லட்சியம் என்ற கனவுடன் வாழ்ந்துவரும் திருப்பூரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர்… தனது வீட்டுச் சூழ்நிலையால், தந்தையுடன் சேர்ந்து கறிவெட்டும் பணி செய்து வருகிறார். இது குறித்த செய்தித்தொகுப்பை பார்க்கலாம்…..

திருப்பூர் மாவட்டம் கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் சண்முக ப்ரியா. கல்லூரி மாணவியான இவர், தாய், தந்தையுடன் மற்றும் 2 தம்பிகளுடன் வசித்து வருகிறார். திருப்பூரில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு பெண்கள் கல்லூரியில், எம்.எஸ்.சி., வேதியியல் முதலாமாண்டு படித்துவரும் சண்முக ப்ரியா, ஆசிரியர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடி வருகிறார்….

தனது தந்தையின் கறிவெட்டும் தொழில் மூலம் வரும் வருமானத்தில் குடும்பம் ஓடுகிறது. அவர் ஒருவர் வருமானத்தில் குடும்ப ஜீவனம், படிப்பு செலவுகளை சமாளிப்பது ஒரு போதும் எளிதாக இருந்ததில்லை. இதனால் சண்முக ப்ரியா எடுத்த முடிவு எந்த ஒரு இளம்பெண்ணும் எடுக்க தயங்கும் ஒன்றாகும். தந்தையுடன் கறி வெட்ட முடிவு செய்தார் சண்முக ப்ரியா. தனது ஓய்வு நேரத்தில் அப்பாவுடன் சேர்ந்து கறிவெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார் மாணவி சண்முகப்ரியா

குடும்பத்தை காக்கவும், படிப்பை தொடரவும் தனது தந்தைக்கு உதவியாக ஞாயிற்று கிழமைகளில் கறிக்கடையில் வேலை செய்து வருவதாகவும், கடையில் நின்று கறிவெட்டி கொடுக்க ஆரம்பத்தில் சற்று தயக்கம் இருந்தாலும், குடும்ப சூழ்நிலையை பார்க்கும்போது அதெல்லாம் மறைந்து போவதாகவும் கூறுகிறார் மாணவி சண்முகப்ரியா..

எப்படியாவது படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டால், பெற்றோரின் குடும்ப சுமை குறையும் என்றும் தனது தம்பிகளையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளார் சண்முகப்ரியா .

லட்சியத்தை அடைவது ஒன்றே லட்சியம் என்பதை உணர்த்துவதில் சண்முக ப்ரியா நம் அனைவருக்கும் உதாரணமாக இருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

Exit mobile version