சென்னையில் மென்பொறியாளரை காரில் கடத்தி பணம் கொள்ளை; 3 பேர் கைது

சென்னையில் பணத்திற்காக மென்பொறியாளர் காரில் கடத்தி பணம் பறித்த கொள்ளை கும்பலை புகார் அளித்த 10 மணி நேரத்தில் காவல் துறையினர் பொறி வைத்து பிடித்தனர். துரிதமாக செயல்பட்டு மீட்ட காவல்துறையினரை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டியுள்ளார்.

சென்னை கே.கே. நகர் எட்டாவது செக்டர், 45-வது தெருவில் வசித்து வருபவர் ஸ்ரீகுமார். இவர் சனிக்கிழமை மாலை வடபழனியில் உள்ள ஷாப்பிங் மால் செல்வதற்கு, ராபிடோ செயலியில் வாடகைக்கு இருசக்கர வாகனம் முன்பதிவு செய்து விட்டு, வீட்டின் அருகே காத்திருந்திருந்துள்ளார். அப்போது காரில் வந்து மூன்று பேர், மழை பெய்வதால் இருசக்கர வாகனத்தில் பிக்கப் செய்வது கடினம் என்றும், அதனால் காரை எடுத்து வந்துள்ளதாக அவரிடம் கூறினர். இதனை நம்பி ஸ்ரீகுமார் காரில் ஏறி அவர்களுடன் புறப்பட்டு சென்றுள்ளார்.

ஆனால் கார் வடபழனிக்கு செல்லாமல், கிண்டி நோக்கி சென்றதை உணர்ந்த ஸ்ரீகுமார் அவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த கும்பல் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த அவர், கையில் இருந்த 11 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளனர்.

பின்னர் கே.கே. நகரில் உள்ள ஸ்ரீகுமார் வீட்டின் அருகே அவரை இறக்கி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் கடத்தல் கும்பல் பறந்து சென்றது. கடத்தல் சம்பவம் குறித்து, கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் ஸ்ரீகுமார் அளித்தார்.

உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன் மற்றும் கே.கே.நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரேமா தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து விருகம்பாக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், மணிகண்டன், சரவணன் மூவரையும் 10 மணி நேரத்தில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கார், கத்தி மற்றும் 11 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். துரிதமாக செயல்பட்ட காவல்துறையினரை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Exit mobile version