இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக மிரட்டல்

இந்திய விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் விமான நிலையங்களில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள ஏர் இந்தியா விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மர்மநபரிடம் இருந்து மிரட்டல் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானத்தை பாகிஸ்தானுக்கு கடத்தப் போவதாக மிரட்டியுள்ளார். மிரட்டலையடுத்து நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு முகமை அவசர கால சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

குறிப்பாக, அனைத்து விமான நிலையங்களின் உள்பகுதி, விமான நிலையங்களை சுற்றியுள்ள இதர வளாகப்பகுதி, விமானங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்களை தீவிரமாக கண்காணித்து உரிய பரிசோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்க கூறப்பட்டுள்ளது.

விமான நிலையங்களில் உள்ள சரக்கு முனையம், உணவு விடுதிகள், அங்காடிகள் ஆகியவற்றில் விழிப்புணர்வுடன் கூடிய பரிசோதனை மற்றும் பாதுகாப்பு செய்யப்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் பரபரப்பு நிலவுகிறது.

Exit mobile version