சென்னையில் மக்கும் குப்பையிலிருந்து ஆயிரத்து 73 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்கபட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு, மக்கும் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக காடுவெட்டி, கோலடி, அயனம்பாக்கம், புளியம்பேடு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 7 உரக்குடில்களில் உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு தயாரிக்கப்பட்ட உரத்தினை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதை நகராட்சி ஆணையர் சித்ரா பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் ஆனந்தஜோதி, சுகாதார ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.