திமுகவுக்கு போனால் இந்த கதிதான்

எம் ஜி ஆர் அவர்களால் 1972 ல் ஸ்தாபிக்கப்பட்டு தமிழக அரசியலில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் கழகம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் திரும்பி இப்போது செந்தில்  பாலாஜி செய்த தவறை அன்றே செய்து அடையாளமிழந்தவர்களில் ஒரு சிலரை இப்போது பார்க்கலாம்.

பி.கே சேகர்பாபு
வடசென்னை மாவட்ட செயலாளராக 9 ஆண்டுகளுக்கும் மேல் பொறுப்புவகித்தவர். அதிமுகவில் அம்மா அவர்களின் அன்பிற்குப் பாத்தியப்பட்டவராக இருந்தவர். முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளில் ஒன்றான ஆர்.கே நகர் தொகுதியின் 2001,2006 ம் ஆண்டு தேர்தல்களில் வென்று சட்ட மன்ற உறுப்பினராகவும் இருந்தவர். உட்கட்சிப்பூசல்கள் என்று வெளியே ஊடகங்கள் பேசிக்கொள்ள, எந்த கருத்தும் சொல்லாமல் திடீரென்று தன் குழப்பமனநிலையின் உச்சத்தை காட்டினார்.

2011 ம் ஆண்டு கோபாலபுரத்திலிருந்து வந்த அழைப்பிற்கு செவிசாய்த்து திமுகவில் சேர்ந்தார். இங்கே நாம் கவனிக்க வேண்டியவற்றுள் ஒன்று
சேரும்போது அதே ஆர்.கே நகரில் பி.கே.சேகர்பாபுவை நிறுத்துவதாக சொன்னார்கள் (செந்தில் பாலாஜிக்கு சொன்னதைப்போல) – ஊடகங்கள் இதைக் கேள்வியாக வைத்தபோது, ஐயா கலைஞர் என்ன முடிவெடுத்தாலும் சரி. கட்சி எடுக்கும் எந்த முடிவுக்கும் சரி என்றார். இப்போது கட்சிப்பொறுப்பில் ( சென்னை கிழக்கு மாவட்ட செயளாலர்) இருக்கிறார்.

ராதாரவி :
அதிமுக விலிருந்து திமுகவிற்கு மாறிப்போனவர்களில் இவரும் ஒருவர். 2017 ஃபிப் 23 அன்று திமுக வில் சேர்ந்தார். இனி வெல்லப்போவது திமுக மட்டும்தான். இனி அதிமுக என்றொன்று கிடையாது. இன்றும் நாளையும் (ஸ்டாலின்) திமுக தான் என்றெல்லாம் வீரமொழி பேசினார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது. 2002 ல் சைதையில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்றார். 2006 ல் தோல்வி. 2006 முதல் 2016 அம்மா மறைவு வரை அடுத்து ஏதும் நகர்வில்லை. கட்சியுடன் இடைவெளி ஏற்பட்டது. அம்மா மறைவுக்குப்பின் தலைமையிடமேற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவை அனுகினார். 2017 ல் திமுகவில் மீண்டும்இணைந்துகொண்டார். வாகை சந்திரசேகரின் மகள் திருமனத்தின்போது இப்போது தமிழகத்திற்கு தலைமையேற்க ஸ்டாலின்தான் சரியானவர் என்று சந்திரசேகரிடம் ராதாரவி பேசியது அவரும் குழப்பநிலையில் இருந்தார் என்றே காட்டுகிறது. அப்போதும் திமுகவில் சேர்ந்தபோது மீண்டும் என் குடும்பத்திற்குள் வந்ததாக உணர்கிறேன் என்றார். ஆம் இப்போது மீ டூ விவகாரத்தில் சின்மயியுடன் பிசியாக சண்டை போட்டுகொண்டிருக்கிறார். இவரால்தான் வாகை சந்திரசேகர் திமுகவில் இணைந்ததாக இவரே சொன்னார். இவர் 2017 ல் சேர்ந்தார். 2016 ல் வாகை சந்திரசேகர் சேர்ந்தார் என்பதும் குறிப்பிட்த்தக்கது. ஒருவேளை உண்மையென்றால் நல்ல கட்சியென்று அவரை அனுப்பிவிட்டு ஒராண்டுகாலம் அதிமுக வில் நீங்கள் என்ன செய்தீர்கள்?

ராஜ கண்ணப்பன் :
1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக திகழ்ந்தவர் கண்ணப்பன். பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தார். 1996ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய கண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது பெயரையும் ராஜ. கண்ணப்பன் என மாற்றிக் கொண்டார். 2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் கட்சியைக் கலைத்து விட்டு திமுகவில் இணைந்தார்.2006ம் ஆண்டு இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றும்,அமைச்சர் பெரியகருப்பனுடன் மோதல் ஏற்பட்டதனால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாகவும் செய்தி வெளியானது. திமுகவில் இருந்துகொண்டே தேமுதிகவில் இணைய பல முக்கியப் புள்ளிகள் மூலம் முயற்சிக்கப்பட்டது. ஆனால் தேமுதிகவில் அவருக்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், இறுதியான முடிவாக மறுபடியும் அதிமுகவில் இணைந்தார். அதிமுக தந்த ஆதரவை வெறெந்த இடத்திலும் எதிர்பார்க்கூடமுடியாது. புரட்சித்தலைவரின் புகழ் உள்ளவரை அதிமுக வை எந்தக் கொம்பனாலும் சாய்க்க முடியாது என்று கடைசியாக அதிமுகவில் இணைந்தபோது பேசினார். 

கே.காளிமுத்து :
சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளரான இவர் சபாநாயகராகவும் விளங்கினார். 2001 தேர்தலில் வென்றவர். எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் திமுகவுக்குச் சென்றார். பின் உண்மை புரிந்து கொண்டு மீண்டும் திரும்பி வந்து அம்மா தலைமையில் அதிமுகவில் இணைந்துகொண்டார். 

டி.எம் செல்வகணபதி:

1991 – 96 கால ஆட்சியில் அம்மா தலைமையிலான அரசின்கீழ் ஊரக நிர்வாக அமைச்சராக இருந்தவர். 2008ம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.  2014ம் ஆண்டு நிதிமோசடி வழக்கில் சிக்கி தகுதியிழந்தார். ஊழலுக்காக தகுதிநீக்கம் செய்யப்பட்ட முதல் ராஜ்ய சபா உறுப்பினர் என்கிற பட்டம்
பெற்றார்.

எஸ்.முத்துசாமி:
எம்.ஜி.ஆர். காலத்தில் அமைச்சராக இருந்தவர். முன்பு ஜானகி அணியில் இடம் பெற்றிருந்தார். பின்னர் ஜானகி அணியும், ஜெ.ஜெயலலிதா அணியும் இணைந்தபோது முத்துச்சாமியும் ஜெயலலிதா தலைமையை ஏற்று அரசியல் நடத்தி வந்தார். ஆனால் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் சிறப்பாக கழகப்பணி செய்துகொண்டிருந்த போதும், அதே மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்சாமிக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில் 2010 ம் ஆண்டு திமுகவில் இணைத்துக் கொண்டார். இவருடன்  .கே.சின்னசாமி, சி.மாணிக்கம், வி.பி.மாதைய்யன் போன்றோருடன் திமுகவில் இணைந்தார்.

எம்.சின்னசாமி:
2010 ஜுன்10 அன்று திமுகவில் இணைந்தார். அப்போது, திமுகவின் அணுகுமுறை நன்றாக உள்ளது. நான் திமுகவில் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை. மக்கள் தலைவர் கலைஞர், தளபதி மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி செயல்படுவேன் என்றார்.

இப்போது  தளபதி ”தல” ஆகியும்விட்டார். இவர்தான் இன்னும் தலையெடுக்கக் கானோம்.

அழகு திருநாவுக்கரசு
1991 ம் ஆண்டு ஜெயலலிதாவின் அரசின் கீழ் கேபினட் அமைச்சராக இருந்தவர். அண்மையில் 2010 ம் ஆண்டு ஜுன் 27 அன்று மன்னார்குடியில் திமுகவில் இணைந்தார். இதில் அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மன்னார்குடி ஞானசுந்தரம், எம்.எஸ்.மாணிக்கம், எம்.தங்கமணி, து.மூர்த்தி, பாஜக மாநில வர்த்தக அணிச் செயலாளர் சி.ஞானசுந்தரம் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். இப்போது சில ஆண்டுகளாகவே இவரையோ இவர் பெயர்களையோ அரசியல் வட்டத்தில் காணவில்லை. 

செந்தில் பாலாஜி:
இந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்திருக்கும் புதுவரவுதான் செந்தில் பாலாஜி. கல்லூரிப்படிப்பை பாதியிலே கைவிட்டுவிட்டு மதிமுக வில் தொடங்கி பிறகு திமுகவிற்கு வந்தார். எப்போதும் தனக்கென அங்கீகாரம் இருக்கவேண்டும் என்று எண்ணும் செந்தில்குமார் திமுகவை விட்டு அதிமுக வந்தார். 
அங்கு மாணவரணி தொடங்கி கடைசியில் அம்மாவின் அன்பிற்கு  அனுக்கமாகி மாவட்டசெயலாளர் பதவியும் பெற்றார். மணல் கடத்தல் போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியிலும் அம்மா மத்தியிலும் நற்பெயர் பெற்றார். கரூர் மாவட்டம் என்றாலே செந்தில் இருக்கிறாரே என்கிற அளவிற்கு கட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்த செந்தில் பாலாஜிக்கு அம்மா மறைவுக்குப் பிறகு நேரம் சரியில்லாமல் போனது. எப்போதும் அவர் பக்கம் அடித்துவந்த காத்து அப்போதுமுதல் அவர்பக்கம் எட்டிக்கூடப்பார்ப்பதில்லை. முடிவெடுப்பதில் இருந்த குழப்பம்,

எப்போதுமிருந்த அங்கீகார மோகம் இவற்றால் அணிமாறினார். தகுதி நீக்கம் செய்யப்பட எம் எல் ஏ என்பதை தவிர வேறெந்த புதிய அங்கீகாரத்தையும் பெற்றாரில்லை. அதே குழப்ப மனநிலையிலிருந்தபடியே இப்போதும் மேற்கண்டவர்கள் செய்த அதே தவறைச் செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

மொத்தத்தில், அரசியல் சூழலின் பல்லாண்டுகால வரலாறு நமக்கு கற்பித்ததன்படி, ஒவ்வொரு முறையும் திமுக பயந்தபோது மற்றைய கட்சிகளுக்குள் குழப்பம் ஏற்படுத்துவதை வழக்கமாகவே கொண்டு வந்திருக்கிறது. இப்போது இந்த வலையில் விழுந்துபடிருக்கிறார் கரூர்காரர். விரைந்து விழித்துக்கொள்வராக.,

Exit mobile version