ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இராப்பத்து 8ஆம் நாள் விழாவில் திருமங்கை மன்னன் வேடுபறி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி பகல்பத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறப்பு ஜனவரி 6 ஆம் தேதி நடைபெற்றது. இராப்பத்து விழாவின் 8 ஆம் நாளில் திருமங்கை மன்னனுக்காக நடத்தப்படும் வேடுபறி நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பட்டார். கோயிலின் நான்காம் பிரகாரமான மணல்வெளி பகுதியில் நம்பெருமாள் வையாளி கண்டருளி, பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருமங்கை மன்னன் வகையறாவைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெருவிலிருந்து வாணவேடிக்கை, சிலம்பாட்டத்துடன் திருமங்கை மன்னன் வேடமிட்டு மேளதாளத்துடன் வந்தனர். அவர்கள் மணல் வெளியில் நம்பெருமாளை வணங்கி மரியாதை செலுத்தினர். அதன்பின்னர் நம்பெருமாள் மணல் வெளியிலிருந்து புறப்பட்டு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். அங்கு அலங்காரம் அமுது செய்தல், அரையர் சேவை, பொதுஜன சேவை, திருப்பாவாடை கோஷ்டி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் மண்டபத்திலிருந்து வீணை வாத்தியத்துடன் புறப்பட்ட நம்பெருமாள், கருவறை சென்றடைந்தார்.