பிரெக்ஸிட் விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற முடியாததால், பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்பு முடிவின், அடிப்படையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து மார்ச் மாதமே வெளியேற இங்கிலாந்து அரசு திட்டமிட்டது. ஆனால் அந்நாட்டு பிரதமர் தெரசா மே-வின் பிரெக்ஸிட் செயல்திட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை. பிரிட்டன்-ஐரோப்பிய ஒன்றியம் இடையே 2018 ஆம் ஆண்டு நவம்பரில், பிரெக்ஸிட் வெளியேற்ற ஒப்பந்தம் கையெழுத்தானது.
கடந்த ஜனவரி மாதம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 432 எம்பிக்கள் எதிராக வாக்களித்ததால் ஒப்பந்தம் தோல்வியடைந்தது. இந்நிலையில், 2-வது முறையாக மீண்டும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை, நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் பிரதமர் தெரேசா மே தாக்கல் செய்தார். ஒப்பந்தத்திற்கு எதிராக 391 எம்பிக்களும் ஆதரவாக 242 எம்பிக்களும் வாக்களித்தனர். இதனால் 142 வாக்குகள் வித்தியாசத்தில் ஒப்பந்தம் 2-வது முறையாக தோல்வியடைந்தது. இதையடுத்து தெரசா மே-வின் கோரிக்கையை ஏற்று, ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கான காலக்கெடு அக்டோபர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடைபெற இருந்தது. ஆனால், பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு ஆளும் பழமைவாத கட்சியில் கடும் எதிர்ப்பு உள்ளதால், வாக்கெடுப்பு மீண்டும் தோல்வியடையும் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் தெரசா மே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். ஜூன் 7 ஆம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.