நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
கொரோனா பரவல் தடுப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல், அக்டோபர் 3ல் இருந்து நவம்பர் 7 வரை, 3 கட்டங்களாக நடத்தப்படும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். அப்போது, பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 1 மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், காலியாக உள்ள தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.