பிரதமர் நரேந்திர மோடி தனது “மனதின் குரல்” வானொலி உரையில், வேலூர் மாவட்ட பெண்கள் ஒன்றிணைந்து மேற்கொண்டு வரும் நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டம் குறித்து வியந்து பாராட்டியுள்ளார். பிரதமரின் பாராட்டுக்களை பெறும் அளவிற்கு அந்த பெண்கள் குழு என்ன சாதனையை நிகழ்த்தியுள்ளது என்பதை விளக்குகிறது இந்தத் தொகுப்பு.
வறட்சி மாவட்டமாக அறியப்படும் வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக உள்ள பாலாறும், அதன் கிளை ஆறுகளும் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுவதால், அங்கு விவசாய வளர்ச்சி நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதே நேரம் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்து கொண்டே வருவதால் கவலையில் ஆழ்ந்திருந்தனர் வேலூர் மக்கள். இந்நிலையில்தான், அவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டம். தமிழகத்திலேயே முதன் முறையாக இந்தத் திட்டத்தை, வேலூர் மாவட்ட நிர்வாகமும் தன்னார்வ தொண்டு நிறுவனமும் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
முழுக்க முழுக்க, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் பெண்களைக் கொண்டு வேலூர் கணியம்பாடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது வேலூர் நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டம். இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரித்து வறட்சியை போக்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் திட்டப் பணிகளில் தங்களை அர்ப்பணித்து வரும் பெண்கள்.
ஒட்டுமொத்தமாக 24 பஞ்சாயத்துகளில் நிலத்தடி நீர் செரிவூட்டும் திட்டத்தை செயல்படுத்தியதில் மொத்தம் 349 நீர் செரிவூட்டும் உறைகிணறுகளும், 210 தடுப்பணைகளையும் கட்டியுள்ளதாகவும் இதன் பயனாக நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவிக்கிறார் வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன்.
இத்திட்டத்தின் வெற்றியை அடுத்து வேலூர் மாவட்டத்தின் வறண்ட பகுதிகள் அனைத்திற்கும் திட்டம் விரிவுபடுத்தும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் உதவியுடன், வேலூர் மாவட்டத்தின் வறட்சியைப் போக்கி விவசாயிகளுக்கு வளம் தரும் இத்திட்டப் பணிகளை 2020-ம் ஆண்டுக்குள் முடிப்பதே தங்கள் இலக்கு என்கிறார் மாவட்ட ஆட்சியர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் அப்பகுதிகளில் நீர்மட்டம் 6 முதல் 12 அடிவரை உயர்ந்துள்ளது. இதனால் 5 ஆண்டுகளுக்கு முன் ஒரு போகம் விளைந்த விளைச்சல் இன்றைக்கு 2 போகம் விளைகிறது. இதுகுறித்து தனது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பேசிய பாரத பிரதமர் நரேந்திர மோடி வேலூர் மாவட்டம் கணியம்பாடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த திட்டத்தின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளாதக பாராட்டியது உழைக்கும் பெண்களை பெருமைபடுத்தியுள்ளது.