வைகை,குண்டாறு, காவிரி இணைப்புத் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் பூமி பூஜையிட்டு துவக்கி வைப்பார் என கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட வைகை ஆற்றில், காட்டு கருவேல மரங்கள் மற்றும் முள்புதர்கள் அடர்ந்து, நீரோட்டத்தை பாதிப்பதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் விவசாயிகள் அரசிற்கு கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து, கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன், வைகை நதியினை சீரமைக்கும் பணியினை துவக்கி வைத்ததுடன், அதனை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வைகை நதியை சீரமைக்கும் பணி, மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 20 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், வைகை-காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி விரைவில் பூமி பூஜையிட்டு துவக்கி வைப்பார் என்றும், வைகை குண்டாறு காவிரி இணைப்பு திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்கு விவசாயிகள் சார்பாக மானாமதுரையில் மார்ச் 1 ஆம் தேதி சிறப்பான வரவேற்பு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.