செவ்வாய்க் கோளில் நிகழும் தட்பவெப்ப நிலையில் தாவரங்களை வளர்ப்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் விஞ்ஞானி ஓருவர் வெற்றி பெற்றுள்ளார். அது குறித்த சிறப்புத் தொகுப்பு.
செவ்வாய்க் கோளில் நிலவும் தட்ப வெப்ப நிலை குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் செவ்வாயில் மனிதர்களைக் குடியமர்த்தவும் தனியார் நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.
இந்த நிலையில் அங்கு உணவு மற்றும் மருந்து வகைத் தாவரங்களை வளர்ப்பது குறித்த ஆய்வு விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டு வருகிறது. ‘செக்’ நாட்டைச் சேர்ந்த ஜான் லூக்காசெவிக் என்ற விஞ்ஞானியும் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வந்தார். பூமியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது தற்போது வெற்றி பெற்றுள்ளது.
பராகுவே பல்கலைக்கழக வாழ்வியல் அறிவியல் துறையின் குழுவினரும் இவருடன் சேர்ந்து ஆய்வு நடத்தினர். செவ்வாய்க் கோளின் தட்பவெப்ப நிலையில் மண் இன்றிக் குறைந்த அளவு தண்ணீரில் தாவரங்களை வளர்த்து வந்தனர்.மேலும் கடுகு, முள்ளங்கி, சமையலுக்கு உதவும் நறுமணச்செடிகள், புதினா போன்ற மருத்துவக் குணம் நிறைந்த தாவரங்களைப் பயிரிட்டுப் பராமரித்தனர். இந்தப் பயிர்கள் செழிப்பாக வளர்ந்ததோடு மட்டுமல்லாமல் செவ்வாய்க் கோளில் வளர்க்க அனைத்து முறை ஆய்விலும் தகுதி பெற்றுள்ளதாக ஜான் லுகாசெவிக் தெரிவித்துள்ளார்.
அவரது ஆய்வு வெற்றி பெற்றுள்ளது விஞ்ஞானிகளுக்குப் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.