1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதிநாத் தீர்த்தங்கரர் சிலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த வழுதலங்குணம் கிராமத்தில் சுமார் 100 அடி உயரம் கொண்ட மலைக்குன்று ஒன்று அமைந்துள்ளது. இந்த மலைக்குன்றின் மீது சமண மதத்தவர்களின் இறைவனாகவும், குருவாகவும் கருதப்படும் மிகப்பழமையான ஆதிநாத் தீர்த்தங்கரர் சிலை அமைந்துள்ளது.

மேலும். வடகிழக்கு மாநிலங்களிருந்து இவ்வழியாக செல்லும் துறவிகள் அமைதியான முறையில் மலை மீது அமர்ந்து தியானம் செய்வதற்கும், உறங்குவதற்கும் பயன்படுத்தும் இடமான 10க்கும் மேற்பட்ட படுக்கைகளும், மதகுருவின் காலடியும் செதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திலிருந்து, 300 மீட்டர் தொலைவில் ஒரு சுரங்கப்பாதையும் அதில் வற்றாத சுனையும் அமைந்துள்ளது.

முன்னொரு காலத்தில், இங்கு தங்கும் துறவிகளுக்கு சேவை செய்வதற்காக விரணாமூர் பகுதியில் இருந்த ஜெயினர்கள் மேக்களூர் பகுதியில் வந்து தங்கி சேவை செய்தாகவும், அவர்கள் ஆதிநாத் தீர்த்தங்கர் சிலையை கொண்டு அப்பகுதியில் சிறிய அளவில் கோயில் அமைத்து வழிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. குடிபெயர்ந்த ஜெயினர்கள் தற்போது 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களாக சோமாசிப்பாடியில் வசித்து வருகின்றனர்.

1947 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட இந்த ஜீனாலயத்தில், சாந்தி நாதஸ்வாமி சிலையும் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இக்கோயிலில் கடந்த 2004 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வின் போது இங்குள்ள ஆதிநாத் தீர்த்தங்கரர் சிலை சுமார் 1800 ஆண்டுகள் பழமையானது என அங்குள்ள கல்வெட்டின் மூலம் தெரியவந்துள்ளது.

சக்தி வாய்ந்த இடமான இங்கு பண்டைய காலத்தில் ஜைன மதத்தை ஆதரித்த அரசர்களும், துறவிகளும் தங்கி வழிபட்டு சென்றதாக செவி வழி தகவல்கள் மூலம் தெரியவருகிறது.

வரலாற்றுத் தொன்மை வாய்ந்த இந்த பகுதியில் அமைந்துள்ள சிலை, கால் அடி, மற்றும் சமணர் படுக்கை ஆகியவற்றை சிதைவடையாமல் பாதுகாக்க படவேண்டும் என்றும், இந்த கோயிலுக்கு செல்ல மலைக்குன்றின் மீது பாதை அமைத்து தரவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version