ஜிம்பாப்வே அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது

உள்நாட்டு அரசியல் தலையீடுகளை காரணம் காட்டி ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் சுதந்திரமான, ஜனநாயக முறைப்படியான வாரிய தேர்தல் நடத்தப்படாமல் வெகு நாட்களாக பிரச்சனை நடந்து வந்தது. சர்வதேச கிரிக்கெட் வாரியம் நீண்ட காலமாக முயன்று பார்த்தும், ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர இயலவில்லை.

எனவே ஜனநாயக முறைப்படியான முறையில் வாரிய தேர்தலை நடத்த உறுதி அளிக்காததாலும், கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதி செய்ய முடியாததாலும் ஜிம்பாப்வே அணியை சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை செய்துள்ளது. இதனால் அடுத்து நடைபெற உள்ள 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஜிம்பாப்வே அணியால் பங்கேற்க முடியாது.

அடுத்த மூன்று மாதத்திற்குள் நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு, புதிய நிர்வாகத்தினை தேர்வு செய்யும் பட்சத்தில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் ஜிம்பாப்வே மீதான தடை குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version