ஆட்சியை கவிழ்க்க எண்ணிய எதிரிகளின் எண்ணம் தவிடு பொடியானது -முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என எண்ணிய எதிரிகளின் எண்ணம் தவிடு பொடியாகியுள்ளாதாகவும், எந்த கொம்பனாலும் இந்த ஆட்சியை அகற்ற முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் பழனிசாமி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன்படி கோவை வந்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி-க்கு கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, விழாவில் பேசிய முதலமைச்சர், கட்சியை உடைக்க வேண்டும் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று எண்ணிய எதிரிகளுடைய எண்ணங்கள் இன்றைக்கு தவிடுபொடியாகியுள்ளதாக கூறினார். தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிய புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் 11 ஆண்டுகால சிறப்பான ஆட்சிக்குப் பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தன்னை அர்பணித்து மக்களுக்காக உழைத்தார் என்று குறிப்பிட்டார்.

அவரின் மறைவுக்குப் பிறகு சில எட்டப்பர்கள் எதிரிகளோடு சேர்ந்துகொண்டு இந்த இயக்கத்தை உடைக்க முயற்சி செய்ததாகவும், அத்தனையும் மக்களின் துணையோடு தவிடுபொடியாக்கி புரட்சித்தலைவி அம்மா புரட்சிதலைவர் எம்.ஜி.ஆரின் கனவை நனவாக்க பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சில சதிகாரர்கள் எதிரியா இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத் துணை கொண்டு இயக்கத்திற்கும் ஆட்சிக்கு இடையூறு விளைவித்ததாகவும், கூறினார். மேலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாதுகாத்த இந்த ஆட்சியை எந்த கொம்பனாலும் அகற்ற முடியாது என கூறினார். இறைவன் சார்பில் இருந்து நல்ல தீர்ப்பை நமக்கு கொடுத்திருப்பதாகவும், இந்த ஆட்சியை கவிழ்க்க முற்பட்டவர்களுக்கு தகுந்த தண்டனையை வழங்கி இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில், அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தால் கட்சி வலிமை பெறும் என்றும் கூறினார். மேலும் கோவை மாநகர் ஒரு முதன்மை மாவட்டமாக விளங்குவதற்கு அம்மாவுடைய அரசு துணை நிற்கும் என்றும் உறுதியளித்தார்.

Exit mobile version