கஜா புயலில் இழந்த மரங்களை ஈடுகட்ட, மர விதைகளை கலந்து விநாயகர் சிலை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துவரடிமனை கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக கோவில்களுக்கான சாமி சிலைகள் செய்யும் தொழில் நடைபெற்று வருகிறது. தற்போது விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு, இரசாயனம் கலக்காமல் களிமண் மூலம் சிலைகள் செய்யப்படுகிறது.
இந்தாண்டு தனிச் சிறப்பாக, கஜா புயலில் பாதிக்கப்பட்டு இழந்த மரங்களை மீட்டெடுக்கும் விதமாக விநாயகர் சிலைகளில் விதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நீர் நிலைகளில் சிலைகள் கரைக்கப்படும் பொழுது விதைகள் ஆங்காங்கே முளைத்து மரமாக உருவாகும் வாய்ப்புள்ளது.
சிலை செய்யும் தொழிலாளர்களின் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் சிலைகளுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.